துடிதுடிக்க கதறிய பிரியா... மனைவி, மாமியாரை வெட்டிக் கொன்ற கணவன் - தடுக்க வந்த மாமனாருக்கும் அரிவாள் வெட்டு!

 

கேரள மாநிலம் பீர்மேடு அருகே மதுபோதையில் ஏற்பட்ட குடும்பத் தகராறில் மனைவி மற்றும் மாமியாரைக் கொடூரமாக வெட்டிக் கொலை செய்த நபரைப் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

பீர்மேடு அருகே உள்ள டேன்மேரி செட்டில்மென்ட் பகுதியில் வசித்து வரும் பிரின்ஸ் (32) என்பவருக்கும், அவரது மனைவி பிரியா (30) என்பவருக்கும் இடையே குடும்பப் பிரச்சினை இருந்து வந்துள்ளது. சம்பவத்தன்று பிரின்ஸ் வீ்ட்டிற்கு அதிக மதுபோதையில் வந்துள்ளார். அப்போது தம்பதியினரிடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில், ஆத்திரமடைந்த பிரின்ஸ் தனது மனைவி பிரியாவை அரிவாளால் கொடூரமாக வெட்டியுள்ளார்.

சத்தம் கேட்டு தடுக்க வந்த மாமியார் நேசம் (62) என்பவரையும் பிரின்ஸ் வெட்டினார். இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், தடுக்க முயன்ற மனைவியின் தந்தையையும் பிரின்ஸ் தாக்கியதில் அவர் பலத்த காயமடைந்தார்.

காயமடைந்த மனைவியின் தந்தை உடனடியாக மீட்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காகக் கோட்டயம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த கொடூரச் சம்பவத்தில் ஈடுபட்ட பிரின்ஸைப் பீர்மேடு காவல்துறையினர் உடனடியாகக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பிரின்ஸ் ஏற்கனவே கொலை மிரட்டல் விடுத்து வந்ததாகக் குடும்பத்தினர் முன் அளித்த புகார் மீது நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து, அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.