undefined

 அதிர்ச்சி... கல்லூரி மாணவியை மதுக்குடிக்க அழைத்த பேராசிரியர்கள்!

 
 

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் இரவி நேரத்தில் செல்போனில் கூப்பிட்டு, கல்லூரி மாணவியை பேராசிரியர்கள் மதுக்குடிக்க அழைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.திருநெல்வேலி பாளையங்கோட்டையில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வரும் மாணவி ஒருவருக்கு, அந்த கல்லூரியின் பேராசிரியர்கள் 2 பேர் இரவு நேரத்தில் செல்போனில் அழைத்துள்ளனர். 

அதன் பின்னர் மாணவியை செல்போனில் தொடர்பு கொண்டவர்கள், அந்த மாணவியிடம் விரும்பத்தகாத வகையில்  2 பேராசிரியர்களும் பேசியதோடு மட்டுமல்லாமல் மதுக் குடிக்க வருமாறும் அழைத்ததாக கூறப்படுகிறது. 

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி, இது குறித்து தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். உடனடியாக மாணவியின் பெற்றோர், இது குறித்து பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

மறுநாள் காலை, மாணவியின் புகார் தொடர்பாக போலீசார் விசாரணையை தொடங்குவதற்குள், இந்த சம்பவம் தொடர்பாக தங்களது மகளின் படிப்பு பாதிக்கப்பட்டு விடும் என்றும், 2 பேராசிரியர்களின் மீதும் எந்தவிதமான மேல் நடவடிக்கையும் வேண்டாம் என்றும் மாணவியின் பெற்றோர் போலீசாரிடம் தெரிவித்தனர்.

இதையடுத்து வேறு வழியில்லாமல், மேல் நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று மாணவியின் பெற்றோர் கூறியதை, எழுத்துப் பூர்வமாக எழுதி வாங்கி கொண்டு அவர்களை அனுப்பி வைத்தனர்.இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், ‘‘மாணவியிடம் செல்போனில் பேராசிரியர்கள் அநாகரிகமாக பேசியதாக கூறப்படும் புகாரை அவரது பெற்றோர்கள் திரும்ப பெற்றுவிட்டனர். இருந்தாலும் இந்த சம்பவம் குறித்து உளவுத்துறை போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர். இது தொடர்பாக கூடுதல் போலீஸ் டிஜிபி. விளக்கம் கேட்டுள்ளார். இதனால் இந்த சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற உள்ளது” என்றனர். மாணவியை நள்ளிரவு போன் செய்து மது அருந்த பேராசிரியர்கள் வரச் சொன்ன சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.