பொதுமக்களின் எதிர்ப்பால் சொத்து வரி உயர்வு உடனடியாக நிறுத்தம்!

 

பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட தொடர் மனுக்கள் மற்றும் கோரிக்கைகளை ஏற்று, சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சொத்து வரி திருத்த நடவடிக்கையை உடனடியாகத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாகச் சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன் அறிவித்துள்ளார்.

பெருநகர சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில், குறைவாக மதிப்பிடப்பட்டதாகக் கண்டறியப்பட்ட சில சொத்துக்களுக்கு வரி திருத்தம் செய்யப்பட்டு மறுஆய்வு செய்யப்பட்டது. இந்த திடீர் வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், திருத்தத்தை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தியும் கடந்த சில நாட்களாக மாநகராட்சிக்கு ஏராளமான கோரிக்கை மற்றும் குறைதீர்ப்பு மனுக்கள் வந்து குவிந்தன.

பொதுமக்களின் கோரிக்கைகளை தீவிரமாகப் பரிசீலித்த மாநகராட்சி நிர்வாகம், தற்போது மேற்கொள்ளப்பட்ட சொத்து வரி திருத்த நடவடிக்கையை உடனடியாக நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளது. இதன் மூலம், புதிய வரித் திருத்தத்திற்கு முன்பு பொதுமக்கள் எவ்வளவு தொகை செலுத்தி வந்தார்களோ, அதே பழைய வரித் தொகையையே இனி செலுத்தும் நிலை நடைமுறைக்கு வருகிறது.

ஏற்கனவே உயா்த்தப்பட்ட புதிய வரித் தொகையைச் செலுத்திய சொத்து உரிமையாளர்களுக்கு, அவர்கள் கூடுதலாகச் செலுத்திய தொகை வீணாகாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த உபரித் தொகை, அவர்களின் அடுத்தடுத்த அரையாண்டு சொத்து வரி செலுத்தும் போது முன்கூட்டிய வரியாகக் கணக்கில் கொண்டு சரிசெய்யப்படும் என மாநகராட்சி ஆணையர் தெளிவுபடுத்தியுள்ளார்.