தவெக எம்.எல்.ஏ பேச்சுக்குக் கண்டனம் - செப். 3-ல் மதுரையில் அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!
சட்டப்பேரவையில் ஜல்லிக்கட்டுப் போட்டி குறித்து அவதூறாகப் பேசிய தவெக சட்டமன்ற உறுப்பினரைக் கண்டித்தும், தவெக அரசைக் கண்டித்தும் செப்டம்பர் 3-ஆம் தேதி மதுரையில் அதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
சட்டமன்றத்தில் சோழவந்தான் தொகுதி தவெக எம்.எல்.ஏ கருப்பையா, தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு இளைஞர்களைச் சீரழிக்கிறது என்று கொச்சைப்படுத்திப் பேசியிருப்பது மிகுந்த கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதாக எடப்பாடி பழனிசாமி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
2014-ல் உச்சநீதிமன்றம் தடை விதித்தபோது, அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவின் வழிகாட்டுதலாலும், மாணவர்களின் போராட்டத்தாலும் 2017-ல் அவசரச் சட்டம் இயற்றப்பட்டு நிரந்தரச் சட்டம் கொண்டுவரப்பட்ட வரலாற்றை அவர் நினைவுகூர்ந்துள்ளார். மேலும், 2023-ல் உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு இந்தச் சட்டம் செல்லும் எனத் தீர்ப்பு வழங்கியதற்குக் காரணமான அதிமுகவின் சட்டப் போராட்டங்களைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
தவெகவினரின் தான்தோன்றித்தனமான பேச்சைக் கண்டித்தும், ரீல்ஸ் மாடல் அரசைக் கண்டித்தும் அதிமுகவின் மதுரை மாநகர், மதுரை புறநகர் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டக் கழகங்களின் சார்பில் செப்டம்பர் 3-ஆம் தேதி வியாழக்கிழமை காலை 9.30 மணியளவில் அலங்காநல்லூர் வாடிவாசல் அருகில் இந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.