விஜய்க்கு எதிராக போரட்டம்... நடிகை ஜூலி மீது வழக்குப்பதிவு!
சென்னை மெரினா கடற்கரையில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு (தவெக) எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்ட நடிகை ஜூலி மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது சென்னை போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஜல்லிக்கட்டுப் போராட்டம் மூலம் புகழ்பெற்ற நடிகை ஜூலி, நேற்று மாலை மெரினா கடற்கரையில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டார்.
அவர் ஒரு கையில் ஆளுங்கட்சியான திமுக-வுக்கு ஆதரவான வாசகங்கள் அடங்கிய பேனரையும், மற்றொரு கையில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு எதிரான வாசகங்கள் கொண்ட பேனரையும் ஏந்தியிருந்தார். குறிப்பாக, விஜய்க்கு எதிரான பேனரில் 'அணில்' படம் பொறிக்கப்பட்டு, அதன் மீது 'எக்ஸ்' (X) குறியீடு இடப்பட்டிருந்தது. இது விஜய் ரசிகர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
மெரினா கடற்கரையில் உரிய அனுமதியின்றிப் போராட்டம் நடத்தியதாலும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாலும் அங்கிருந்த போலீசார் ஜூலி உட்பட 4 பேரைக் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். தடையை மீறி கூடுதல் மற்றும் பொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பின்னர், மீண்டும் இது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என போலீசார் அவர்களுக்குக் கடும் எச்சரிக்கை மற்றும் அறிவுரைகளை வழங்கி அனுப்பி வைத்தனர்.
சமீபகாலமாகவே சமூக வலைதளங்களில் தவெக நிர்வாகிகளுக்கும் நடிகை ஜூலிக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. தவெக தலைவர் விஜய் குறித்து ஜூலி விமர்சனம் செய்ததையடுத்து, தவெக தரப்பில் அவர் மீது ஏற்கனவே புகார் அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், மெரினாவில் அவர் நேரடியாகக் களமிறங்கியுள்ளது தேர்தல் களத்தில் கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.