தவெகவில் இணைந்த சத்தியபாமாவைக் கண்டித்து தாராபுரத்தில் கண்டன போஸ்டர்கள்!

 

தமிழகத்தில் தவெக அரசு புதிய ஆட்சியை அமைத்துள்ள சூழலில், எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் சிலர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு ஆளுங்கட்சியான தவெக-வில் இணைந்து வருகின்றனர். அந்த வரிசையில், தாராபுரம் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினராக இருந்த சத்தியபாமா அண்மையில் தவெக-வில் இணைந்தார். இதனைத் தொடர்ந்து, தாராபுரம் நகரின் முக்கியப் பகுதிகளில் அதிமுகவினர் ஒட்டியுள்ள போஸ்டர்கள் தற்பொழுது விவாதப் பொருளாக மாறியுள்ளன.

தாராபுரம் பேருந்து நிலையம், தலைமைச் செயலகச் சாலை மற்றும் முக்கியச் சந்திப்புகளில் அதிமுக தொண்டர்களால் ஒட்டப்பட்டுள்ள அந்தப் போஸ்டர்களில் கடுமையான கண்டனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

"அதிமுக தொண்டர்கள் தங்களின் ரத்தமும் வியர்வையும் சிந்தி உழைத்த உழைப்பினால் மட்டுமே நீங்கள் தேர்தலில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக முடிந்தது" என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. தவெக-வின் அரசியல் ரீதியான குதிரை பேரத்திற்கு ஆசைப்பட்டு, கொள்கைகளைத் தூக்கி எறிந்துவிட்டு விலைபோன 'துரோகி' சத்தியபாமாவை வன்மையாகக் கண்டிக்கிறோம்" என்ற வாசகங்கள் அந்தப் போஸ்டர்களில் பிரசுரிக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் அண்மைக் காலமாக நிலவி வரும் இந்த அரசியல் நகர்வுகளின் பின்னணியில், சத்தியபாமா மட்டுமல்லாமல் மேலும் சில சட்டமன்ற உறுப்பினர்களும் தங்களது பதவிகளைத் துறந்து தவெக-வில் இணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் ஆகிய தொகுதிகளின் சட்டமன்ற உறுப்பினர்களும் இதேபோன்று தங்களது முந்தைய கட்சிப் பதவிகளையும், எம்.எல்.ஏ பதவிகளையும் ராஜினாமா செய்துவிட்டுத் தமிழக வெற்றிக் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர்.

ஒரே நேரத்தில் பல எதிர்க்கட்சி எம்.எல்.ஏ-க்கள் ஆளுங்கட்சியை நோக்கி நகர்வது தமிழக அரசியலில் புதிய விவாதங்களை உருவாக்கியுள்ள நிலையில், தாராபுரத்தில் ஒட்டப்பட்டுள்ள இந்தக் கண்டன போஸ்டர்களால் அப்பகுதியில் அரசியல் பதற்றமும், காவல்துறையின் கண்காணிப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.