அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிராக தெஹ்ரானில் பிரம்மாண்ட பேரணி - 'இங்கிலாப்' சதுக்கத்தில் குவிந்த மக்கள்!

 

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே தற்காலிகப் போர்நிறுத்த உடன்பாடு (Ceasefire) ஏற்பட்டுள்ள போதிலும், ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராகப் பொதுமக்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு பிரம்மாண்ட போராட்டத்தை முன்னெடுத்தனர்.

கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரானின் ராணுவக் கட்டமைப்புகள் மற்றும் அணுசக்தி நிலையங்கள் மீது நடத்திய 40 நாள் தாக்குதலுக்குப் பிறகு, ஏப்ரல் 7-ம் தேதி முதல் ஒரு தற்காலிகப் போர்நிறுத்தம் அமுலுக்கு வந்தது. இருப்பினும், ஈரானின் முக்கியப் பகுதிகளில் நிலவும் பதற்றம் குறையவில்லை.

தெஹ்ரானின் வரலாற்றுச் சிறப்புமிக்க இங்கிலாப் சதுக்கத்தில் நேற்று கூடிய பொதுமக்கள், ஈரான் கொடிகளையும் தலைவர்களின் உருவப்படங்களையும் ஏந்திப் பேரணியில் ஈடுபட்டனர். "அமெரிக்கா ஒழிக", "இஸ்ரேல் ஒழிக" போன்ற முழக்கங்களை எழுப்பிய அவர்கள், நாட்டின் புதிய தலைவருக்குத் தங்களது ஆதரவைத் தெரிவித்தனர்.

"நாட்டைப் பாதுகாக்கவும், எந்தவொரு அந்நிய ஆக்கிரமிப்பையும் எதிர்கொள்ளவும் நாங்கள் எப்போதும் தயாராக இருக்கிறோம்" என ஆர்ப்பாட்டக்காரர்கள் உறுதிபடத் தெரிவித்தனர்.

மறுபுறம், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரானுக்கு எதிரான 'அதிகபட்ச பொருளாதார அழுத்த'  கொள்கையைத் தீவிரப்படுத்தியுள்ளார்.

அமெரிக்க அதிகாரிகள் மற்றும் நலன்களுக்கு எதிராகத் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டதாகக் கூறி, ஈரானைச் சேர்ந்த 7 முக்கியத் தளபதிகள் மீது டிரம்ப் நிர்வாகம் புதிய தடைகளை விதித்து உத்தரவிட்டுள்ளது. இதுமட்டுமின்றி, ஈரானின் எண்ணெய் கடத்தல் வலையமைப்பை முடக்க 'ஆபரேஷன் எகனாமிக் ஃபியூரி'  என்ற பெயரில் புதிய பொருளாதாரக் கட்டுப்பாடுகளையும் அமெரிக்கா அறிவித்துள்ளது.

தற்போது ஏற்பட்டுள்ள போர்நிறுத்தம் நீடிக்குமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. நிரந்தர அமைதி ஏற்பட வேண்டுமானால் ஈரானின் அணுசக்தி திட்டங்கள் முடக்கப்பட வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்துகிறது. ஆனால், அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள் முழுமையாக நீக்கப்பட்டால் மட்டுமே பேச்சுவார்த்தை சாத்தியம் என ஈரான் பிடிவாதம் காட்டி வருகிறது. இதனால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தொடர்ந்து போர்ப்பதற்றம் நீடிக்கிறது.