தமிழகம் முழுவதும் மார்ச் 12-ல் தவெக போராட்டம்!
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தனது கட்சியின் போராட்டக் களத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் முயற்சியில் இறங்கியிருக்கிறார். தேர்தல் நெருங்கும் வேளையில், தமிழக அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் மார்ச் 12-ம் தேதி தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பிரம்மாண்ட போராட்டத்தை நடத்தப்போவதாகத் தமிழக வெற்றிக் கழகம் முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும் என்று தவெக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இது சமூக நீதிக்கான அடிப்படைத் தேவை என்பதை முன்வைத்து இந்தப் போராட்டம் ஒருங்கிணைக்கப்படுகிறது. தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும், குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும் கூறி திமுக அரசுக்கு எதிராகத் தவெகவினர் முழக்கமிட உள்ளனர்.
தமிழகத்தில் போதைப் புழக்கத்தைத் தடுக்கத் தவறியதாகக் கூறி, தமிழக அரசை வன்மையாகக் கண்டித்து இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது. சென்னையில் நடைபெறும் பிரதான போராட்டத்தில் கட்சியின் தலைமைக்கழக நிர்வாகிகள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர்.
தமிழகத்தின் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் அந்தந்த மாவட்டச் செயலாளர்கள் தலைமையில் தவெக தொண்டர்கள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளனர். சமீபத்தில் விஜய் தனது கட்சி நிர்வாகிகளைத் தொடர்ந்து சந்தித்து வரும் நிலையில், களத்தில் இறங்கிப் போராடும் இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் உற்று நோக்கப்படுகிறது. குறிப்பாக, திமுக அரசின் நிர்வாகத் திறமையின்மையைக் குறிவைத்துத் தேர்தல் களத்தில் தனது கட்சியின் இருப்பை வலுவாகப் பதிவு செய்ய விஜய் திட்டமிட்டுள்ளார்.