டெல்லியில் மீண்டும் தீவிரமடையும் போராட்டம் - ஜந்தர் மந்தர் பகுதியில் தலைவர்கள், இளைஞர்கள் கைது!

 

டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி SFI-DYFI, ஆம் ஆத்மி மற்றும் இடதுசாரி அமைப்புகள் சார்பில் நடைபெற்ற போராட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தடையை மீறிப் போராட்டத்தில் ஈடுபட்ட ஆம் ஆத்மி கட்சித் தலைவர்கள், மாணவர் அமைப்புகளின் நிர்வாகிகள் உள்ளிட்ட சுமார் 150-க்கும் மேற்பட்டோர் டெல்லி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தேர்தல் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் மற்றும் SIR முறைகேடு விவகாரங்களில் தேர்தல் ஆணையம் பாரபட்சமாக நடந்து கொள்வதாகவும், ஜனநாயக முறைக்கு எதிராகவும் செயல்படுவதாகக் குற்றம் சாட்டி தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகளும், மாணவர் அமைப்புகளும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

காந்தி ஜெயந்தியான இன்று ஜந்தர் மந்தரை நோக்கி SFI, DYFI மற்றும் பல்வேறு அமைப்பினர் பேரணியாகச் சென்று போராட்டம் நடத்தத் திட்டமிட்டிருந்தனர். ஆனால், இதற்கு டெல்லி காவல்துறை அனுமதி மறுத்துத் தடை உத்தரவு பிறப்பித்திருந்தது.

காவல்துறை தடையை மீறி ஜந்தர் மந்தர் பகுதியில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களையும், அரசியல் கட்சித் தலைவர்களையும் காவல்துறையினர் தடுத்து நிறுத்திக் கைது செய்து பேருந்துகளில் அழைத்துச் சென்றனர். மேலும், அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு ஜந்தர் மந்தர் செல்லும் சாலைகள் முழுமையாக மூடப்பட்டுள்ளன.

மத்திய பாஜக அரசின் தூண்டுதலின் பேரில் காவல்துறையினர் ஜனநாயக முறையிலான போராட்டங்களை ஒடுக்குவதாகவும், தங்களின் நியாயமான கோரிக்கைகளை எத்தகைய அடக்குமுறைகளைக் கொண்டும் தடுத்து நிறுத்த முடியாது எனவும் போராட்டத்தில் ஈடுபட்ட அமைப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.