டெல்லியில் போராட்டம் தீவிரம்.. இளைஞர்கள் மீது 'தேசிய பாதுகாப்புச் சட்டம்' பாய உத்தரவு!
டெல்லியில் ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு எதிராகத் தேசிய பாதுகாப்புச் சட்டத்தைப் பயன்படுத்த டெல்லி துணை நிலை ஆளுநர் தரண்ஜித் சிங் சந்து உத்தரவிட்டுள்ளார்.
மாணவர் போராட்டத்தைக் கட்டுப்படுத்தவும், சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கவும் டெல்லி துணை நிலை ஆளுநர் இந்த அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவின் மூலம், போராட்டத்தில் ஈடுபடும் இளைஞர்களைத் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நேரடியாகக் கைது செய்ய டெல்லி காவல் ஆணையருக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்படும் நபர்களை நீதிமன்ற விசாரணை ஏதுமின்றி, பிணையும் வழங்கப்படாமல் ஓராண்டு காலம் வரை சிறையில் அடைக்க முடியும் என்பது இதன் சிறப்பு அம்சமாகும். நீட் முறைகேடு தொடர்பாக மாணவர்கள் நடத்தி வரும் போராட்டத்தில் ஏற்கனவே தடியடி மற்றும் இணைய சேவை துண்டிப்பு போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தன.
தற்போது டெல்லி நிர்வாகம் தேசிய பாதுகாப்புச் சட்டத்தை ஏவியுள்ளதன் மூலம், போராட்டம் மேலும் முடக்கப்படலாம் என மாணவர் அமைப்புகள் கவலை தெரிவித்துள்ளன. மாணவர்களின் ஜனநாயகப்பூர்வமான போராட்டத்தை ஒடுக்க இத்தகைய கடுமையான சட்டங்களைப் பயன்படுத்துவதற்குக் பல்வேறு தரப்பினரும் தங்களின் எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றனர்.