ரூ.100 கோடி தனியார் பள்ளி மோசடி வழக்கு: பி.டி. அரசகுமார் குடும்பத்தினர் வீடுகளில் சோதனை?

 

 

தனியார் பள்ளிகளுக்கு அரசு அங்கீகாரம் மற்றும் பல்வேறு அனுமதிகளை பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.100 கோடி வரை மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்க கூட்டமைப்பின் தலைவர் பி.டி. அரசகுமார் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், பள்ளிகளின் தரத்தை உயர்த்துவதற்கான அனுமதி, டிடிசிபி, சிஎம்டிஏ உள்ளிட்ட பல்வேறு அரசு அனுமதிகளை பெற்றுத் தருவதாகக் கூறி பணம் வசூலிக்கப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டது.

இந்தப் புகாரின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். கடந்த ஜூன் 27-ம் தேதி பி.டி. அரசகுமார் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் மீது குண்டர் தடுப்புச் சட்டமும் பயன்படுத்தப்பட்டது. எனினும், செப்டம்பர் 28-ம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் அவரது மீதான குண்டர் தடுப்புச் சட்ட உத்தரவை ரத்து செய்தது.

இந்த வழக்கில் அரசகுமாரின் உறவினர்கள் ஆரோக்கியராஜ், சுரேஷ் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரை 177 தனியார் பள்ளிகளிடம் இருந்து புகார்கள் பெறப்பட்டுள்ளதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வழக்கில் தொடர்புடைய வங்கிக் கணக்குகள் மற்றும் பணப் பரிவர்த்தனைகள் குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே, வழக்கின் விசாரணை தற்போது அடுத்தகட்டத்தை எட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பி.டி. அரசகுமாரின் குடும்பத்தினருடன் தொடர்புடைய இடங்களிலும் போலீசார் கவனம் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது.இந்த நிலையில், சென்னை ஓஎம்ஆர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் பி.டி. அரசகுமாரின் மகன் மற்றும் மகள் தொடர்புடைய வீடுகளில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சோதனையில் வழக்கு தொடர்பான ஆவணங்கள் மற்றும் டிஜிட்டல் ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதா என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இதுவரை வெளியாகவில்லை.

இந்த வழக்கில் ஏற்கெனவே பல்வேறு ஆவணங்கள், செல்போன்கள், கணினிகள் உள்ளிட்ட டிஜிட்டல் சாதனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தனியார் பள்ளிகளிடம் இருந்து பெறப்பட்டதாகக் கூறப்படும் பணம் எவ்வாறு பரிமாற்றம் செய்யப்பட்டது என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.வழக்கின் முழுமையான விசாரணை முடிந்த பின்னரே மோசடி தொடர்பான குற்றச்சாட்டுகளின் உண்மை நிலை மற்றும் இதில் தொடர்புடையவர்களின் பங்கு குறித்து தெளிவான தகவல்கள் வெளியாகும்.