டெண்டர் ஒப்பந்தங்களில் கட்டுப்பாடுகளுக்குத் தடை - பொதுப்பணித்துறைச் செயலாளர் உத்தரவு!

 

தமிழகப் பொதுப்பணித்துறையில் உள்கட்டமைப்பு மற்றும் பல்வேறு அரசுத் திட்டப் பணிகளுக்கான ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்படும் போது, வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் வகையில் பொதுப்பணித்துறைச் செயலாளர் சுன்சோங்கம் ஜடக் சிரு ஐஏஎஸ் அனைத்துத் துறை உயர் அதிகாரிகளுக்கும் புதிய அதிரடி உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளார்.

அரசு ஒப்பந்தங்களில் குறிப்பிட்ட சில தனிநபர்கள் அல்லது நிறுவனங்களுக்கு மட்டுமே சாதகமாகத் தேவையற்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து, தற்போதைய தவெக அரசு இந்த அதிரடிச் சீர்திருத்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

பொதுப்பணித்துறைச் செயலாளர் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ சுற்றறிக்கையில், திட்டப் பணிகளுக்கான டெண்டர் நிபந்தனைகளை வடிவமைக்கும் போது, குறிப்பிட்ட ஒரு தனிநபரையோ அல்லது நிறுவனத்தையோ மனதில் வைத்து, மற்ற தகுதியான ஒப்பந்ததாரர்கள் பங்கேற்பதைத் தடுக்கும் வகையிலான தேவையற்ற மற்றும் பாரபட்சமான விதிகளையோ, கட்டுப்பாடுகளையோ விதிக்கக் கூடாது.

துறையின் அனைத்து விதமான சிறிய மற்றும் பெரிய திட்டப் பணிகளுக்கான டெண்டர்களும் இனி 'இ-டெண்டர்' எனப்படும் ஆன்லைன் இணையதளம் மூலமாக மட்டுமே கோரப்பட வேண்டும். இதன் மூலம் காகிதப் பயன்பாடு குறைவதோடு, முறைகேடுகள் முற்றிலும் தவிர்க்கப்படும்.

டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டதில் இருந்து ஒப்பந்ததாரர்கள் தங்களது விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்குப் போதிய மற்றும் நியாயமான கால அவகாசம் கட்டாயமாக வழங்கப்பட வேண்டும். அவசர அவசரமாக டெண்டர்களை முடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

பல கோடி ரூபாய் மதிப்புள்ள பல்வேறு பணிகளை ஒன்றாக இணைத்து ஒரே 'பேக்கேஜ்' முறையில் டெண்டர் விடுவதைத் தவிர்க்க வேண்டும். இந்த முறையால் பெரிய நிறுவனங்கள் மட்டுமே பயன்பெறும் சூழல் உருவாவதால், பணிகளைத் தனித்தனியாகப் பிரித்து சிறு மற்றும் குறு ஒப்பந்ததாரர்களும் பங்கேற்கும் வகையில் வாய்ப்பளிக்கப்பட வேண்டும்.

காரணங்களை எழுத்துப்பூர்வமாகத் தர வேண்டும்: தகுதியான காரணங்களின்றி எந்தவொரு ஒப்பந்ததாரரின் டெண்டர் விண்ணப்பமும் நிராகரிக்கப்படக் கூடாது. அவ்வாறு ஒரு விண்ணப்பத்தை நிராகரிக்கும் பட்சத்தில், அதற்கான முறையான மற்றும் தகுந்த காரணங்களை அதிகாரிகள் எழுத்துப்பூர்வமாக சம்பந்தப்பட்ட நபருக்குத் தெரிவிக்க வேண்டும்.

அரசுத் திட்டங்களில் ஊழலற்ற மற்றும் வெளிப்படையான நிர்வாகத்தை வழங்குவதற்காகக் கொண்டு வரப்பட்டுள்ள இந்த புதிய விதிகள், தகுதியுள்ள அனைத்து ஒப்பந்ததாரர்களுக்கும் சமமான வாய்ப்பை உருவாக்குவதோடு, அரசுப் பணிகள் தரமாகவும், குறித்த காலத்திற்குள்ளும் முடிவடைய வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.