வேலை முடிந்து வீட்டுக்கு சென்ற செவிலியர் வெட்டிக் கொலை... முட்புதரில் சடலமாக மீட்பு!

 

 

புதுச்சேரி வில்லியனூர் பகுதியில் தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வந்த இளம் செவிலியர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.வில்லியனூர் கோபாலன் கடை பிரதான சாலை பகுதியைச் சேர்ந்த ஜெயஸ்ரீ, நெல்லித்தோப்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்தார். சனிக்கிழமை மாலை பணி முடிந்து வீட்டுக்கு சென்ற நிலையில், அவரைத் தொடர்பு கொண்ட நபர் ஒருவர் முக்கியமான விஷயம் பேச வேண்டும் எனக் கூறி அருகிலுள்ள காலி மனைக்கு அழைத்துச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

அங்கு இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், பின்னர் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஜெயஸ்ரீயை அந்த நபர் தாக்கியதாகவும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் பலத்த காயமடைந்த ஜெயஸ்ரீ சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் வில்லியனூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்தனர். ஜெயஸ்ரீயின் உடல் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.இந்த கொலை தொடர்பாக கலைக்குமார் என்பவரை போலீசார் தேடி வருவதாக தினமணி செய்தி தெரிவிக்கிறது. ஜெயஸ்ரீயுடன் அவருக்கு முன்பு நட்பு இருந்ததாகவும், பின்னர் அவர் பேசுவதை நிறுத்தியதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கிடையே, கொலைக்கான பின்னணி குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். காதல் தொடர்பான பிரச்சினையா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது விசாரணையின் முடிவிலேயே உறுதி செய்யப்படும். தப்பியோடியதாக கூறப்படும் நபரை பிடிக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.புதுச்சேரியில் இளம் செவிலியர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.