பெண் போலீசை மிரட்டி பாலியல் பலாத்காரம்: போலீஸ் சூப்பிரண்டு சுப்பிரமணியன் டிஸ்மிஸ்!
காரைக்காலில் பணியாற்றியபோது திருமணமான பெண் போலீசை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக எழுந்த குற்றச்சாட்டில், போலீஸ் சூப்பிரண்டு சுப்பிரமணியனை (54) புதுச்சேரி அரசு பணிநீக்கம் செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
காரைக்கால் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணியாற்றிய பெண் போலீஸ் ஒருவரை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததுடன், ஆபாச வீடியோக்களைக் காட்டி நகை மற்றும் பணம் பறித்ததாகவும் சுப்பிரமணியன் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான அந்தப் பெண் போலீஸ் தற்கொலைக்கு முயன்றதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பான புகாரின் பேரில் எடுக்கப்பட்ட நடவடிக்கையில், புதுச்சேரி கவர்னர் கைலாஷ்நாதன் உத்தரவின் அடிப்படையில் புதுவை தலைமைச் செயலாளர் சரத் சவுகான், போலீஸ் சூப்பிரண்டு சுப்பிரமணியனை டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டுள்ளார்.காவல்துறை உயரதிகாரி மீது எடுக்கப்பட்டுள்ள இந்த அதிரடி நடவடிக்கை புதுச்சேரி மற்றும் காரைக்கால் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது