புதுச்சேரியில் 89.08% வாக்குகள் பதிவாகி புதிய வரலாறு - 20 வருட சாதனை முறியடிப்பு.. மே 4ல் தேர்தல் முடிவுகள்!

 

தமிழகம், கேரளா மற்றும் அசாம் மாநிலங்களுடன் இணைந்து புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் நேற்று சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் புதுச்சேரி மக்கள் காட்டிய அசாத்திய ஆர்வத்தால், தேர்தல் வரலாற்றில் முதல்முறையாக வாக்குப்பதிவு சதவீதம் 89%-ஐக் கடந்துள்ளது.

நேற்று காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு, இரவு 7 மணி வரை (வரிசையில் நின்றவர்களையும் சேர்த்து) நீடித்தது. புதுச்சேரியில் இதற்கு முன்பு கடந்த 2006-ம் ஆண்டு பதிவான 86 சதவீதமே அதிகபட்சமாக இருந்தது. 20 ஆண்டுகளுக்குப் பிறகு அந்தச் சாதனையை முறியடித்து, தற்போது 89.08% வாக்குகள் பதிவாகியுள்ளன. கடந்த 2021 தேர்தலை விடச் சுமார் 7% கூடுதல் வாக்குகள் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

புதுச்சேரியில் ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி, காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி மற்றும் முதன்முறையாகத் தனித்துப் போட்டியிடும் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் ஆகியவற்றுக்கு இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. இந்த அதிகப்படியான வாக்குப்பதிவு, மாநிலத்தில் ஒரு 'அரசியல் மாற்றத்தை' ஏற்படுத்துமா அல்லது 'ஆளுங்கட்சிக்கு ஆதரவான அலை'யாக இருக்குமா என்ற விவாதம் தற்போதே அரசியல் வட்டாரத்தில் சூடுபிடித்துள்ளது.

வாக்குப்பதிவு எவ்வித அசம்பாவிதமும் இன்றி அமைதியாக நடைபெற்றது. 100% வெப் காஸ்டிங் மூலம் அனைத்து வாக்குச்சாவடிகளையும் தேர்தல் ஆணையம் நேரடியாகக் கண்காணித்தது. வாக்குப்பதிவு முடிந்ததும், வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டுப் பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டன.