மைக் செட் கடையில் வேலை பார்த்த 17 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி பலி!
புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு அருகே, திருமணத்துக்காகக் கட்டப்பட்டிருந்த சீரியல் விளக்குகளைக் கழற்றியபோது மின்சாரம் தாக்கி 17 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குளமங்கலம் வடக்கு அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த அண்ணாதுரை–கவிதா தம்பதியின் மகன் ரூபன், பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு குளமங்கலத்தில் உள்ள தனியார் மைக் செட் கடையில் வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் வடகாடு ஆதிதிராவிடர் குடியிருப்புப் பகுதியில் உள்ள ஒரு வீட்டில், திருமணத்துக்காக அமைக்கப்பட்டிருந்த மின் விளக்குகளை அகற்ற மாடிக்குச் சென்றார்.
அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதில் ரூபன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. தகவலறிந்து வந்த வடகாடு போலீசார் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.