மதுபோதையில் போக்குவரத்து விதிமீறல்... பெண் போலீஸ் கான்ஸ்டபிள் அதிரடியாக சஸ்பெண்ட்... வைரல் வீடியோ!
மராட்டிய மாநிலம் புனேவில் மதுபோதையில் காரை ஓட்டி, போக்குவரத்து விதிகளை மீறிய பெண் போலீஸ் கான்ஸ்டபிள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதைத் தொடர்ந்து அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
புனேவின் கலேபடல் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த அஸ்வினி புல்சந்த் கேகன் (39), கடந்த அக்டோபர் 27-ம் தேதி மஞ்சரி பகுதியில் காரை ஓட்டிச் சென்றபோது எதிர்திசையில் பயணித்ததாகக் கூறப்படுகிறது. அப்போது அவர் போலீஸ் சீருடையில் இருந்துள்ளார். காரில் பதிவு எண் பலகையும் இல்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது.
அந்த வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள், காரை நிறுத்தி அவரிடம் விசாரித்துள்ளனர். அப்போது பொதுமக்களுடன் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காட்சிகள் வீடியோவாகப் பதிவு செய்யப்பட்டு சமூக வலைதளங்களில் வெளியானது.
இதையடுத்து மஞ்சரி போலீசார் அவர் மீது வழக்குப் பதிவு செய்தனர். மருத்துவப் பரிசோதனையில் அவர் மது அருந்தியிருந்தது உறுதி செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து புனே காவல்துறை அவரை பணியிடை நீக்கம் செய்துள்ளது. இந்தச் சம்பவம் குறித்து துறை ரீதியான விசாரணையும் நடைபெற்று வருகிறது.