பஞ்சாப் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் மர்ம நபர்களால் சுட்டுக்கொலை!

 

பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூர் மாவட்டம் மம்டோட் பகுதியில் ஆம் ஆத்மி கட்சியின் முக்கியத் தலைவர் சுட்டுக்கொள்ளப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மம்டோட் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த ஆம் ஆத்மி கட்சித் தலைவர் குர்ப்ரீத் சிங் கோபி என்பவரை, காரில் வந்த ஆயுதம் ஏந்திய மர்ம நபர்கள் விரட்டிச் சென்று சரமாரியாகத் துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.

இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த குர்ப்ரீத் சிங் கோபி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவருடன் சென்ற மற்றொருவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், தப்பியோடிய குற்றவாளிகளைத் தீவிரமாகத் தேடி வருவதுடன், முன்விரோதம் அல்லது தேர்தல் தொடர்பான தகராறு காரணமாக இந்தக் கொலை நடந்ததா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.