பணியில் இருந்த போலீஸ் ASI சுட்டுக்கொலை! குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிவாரணம் ... பஞ்சாப் முதல்வர் அறிவிப்பு!

 

 பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் பணியில் இருந்த போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் (ASI) ஹர்ஜித் சிங் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அமிர்தசரஸின் கேட் ஹகிமா காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் அதிகாலை இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. பணியில் இருந்த ஹர்ஜித் சிங் மீது மர்மநபர்கள் துப்பாக்கியால் சுட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

allowfullscreen

 உயிரிழந்த ஹர்ஜித் சிங், அமிர்தசரஸ் மாவட்ட போலீசில் ASI-யாக பணியாற்றி வந்தார். சம்பவத்தின்போது அவர் பணியில் இருந்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் யார், கொலைக்கான காரணம் என்ன என்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை. சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

போலீஸ் அதிகாரி உயிரிழந்ததையடுத்து, பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் அவரது குடும்பத்துக்கு அரசு சார்பில் ரூ.1 கோடி நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.மேலும், ஹர்ஜித் சிங்கின் குடும்பத்துக்கு கூடுதலாக ரூ.1 கோடி காப்பீட்டுத் தொகை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி குடும்பத்துக்கு அரசு நிவாரணமாக ரூ.1 கோடியும், காப்பீட்டுத் தொகையாக ரூ.1 கோடியும் கிடைக்க உள்ளது.போலீஸ் அதிகாரியின் மரணத்துக்கு பஞ்சாப் டிஜிபி கவுரவ் யாதவ் இரங்கல் தெரிவித்துள்ளார். பணியில் உயிரிழந்த ஹர்ஜித் சிங்கின் குடும்பத்துக்கு பஞ்சாப் போலீஸ் துணை நிற்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.