போலீஸ் இன்ஸ்பெக்டர் காரில் 3.35 கிலோ ஹெராயின்! 6 துப்பாக்கிகளுடன் கைது!

 

 

பஞ்சாப் மாநிலத்தில் போதைப்பொருள் தடுப்பு பிரிவில் பணியாற்றி வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவரின் காரில் 3.35 கிலோ ஹெராயின் மற்றும் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூர் மாவட்டத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் பல்தேவ் சிங். இவர் போலீசாரின் Counter Intelligence பிரிவில் பணியாற்றி வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், பல்தேவ் சிங் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவதாக போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து பெரோஸ்பூர்-மோகா சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது பல்தேவ் சிங் காரில் வந்த நிலையில், போலீசார் அந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில் அவரது காரில் 3.350 கிலோ ஹெராயின், 6 துப்பாக்கிகள், கூடுதல் மேகசின்கள், துப்பாக்கி குண்டுகள் மற்றும் 6 செல்போன்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டதாக பெரோஸ்பூர் மாவட்ட போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

இதையடுத்து பல்தேவ் சிங்கை போலீசார் கைது செய்தனர். அவர் மீது போதைப்பொருள் தடுப்பு சட்டம் மற்றும் ஆயுதச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீஸ் காவலில் விசாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள் எங்கிருந்து கொண்டு வரப்பட்டது, அதன் இலக்கு என்ன, இந்த விவகாரத்தில் வேறு நபர்களுக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீஸ் துறையைச் சேர்ந்த வேறு நபர்களுக்கு தொடர்பு உள்ளதா என்பதும் விசாரணையில் இடம்பெற்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள இன்ஸ்பெக்டர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், போதைப்பொருள் மற்றும் ஆயுதங்கள் தொடர்பான முழுமையான பின்னணி விசாரணையின் முடிவில் தெரியவரும்.