“தூய சக்தியா? இல்லை MLA-க்களைத் தூக்குற சக்தியா?” - மு.க.ஸ்டாலின்!
தமிழக வெற்றிக் கழக அரசு இன்று தனது பெரும்பான்மையை நிரூபித்துள்ள நிலையில், அக்கட்சியின் செயல்பாடுகள் 'அழுக்கு அரசியல்' (Dirty Politics) என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பகிரங்கமாகச் சாடியுள்ளார்.
தவெக அரசு அமைய திமுக தடையாக இருக்காது என்ற தனது முந்தைய நிலைப்பாட்டின் படியே, இன்றைய வாக்கெடுப்பைப் புறக்கணித்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்ததாக ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார். திமுகவுடன் இணைந்து வெளிநடப்பு செய்த தேமுதிக பிரேமலதா விஜயகாந்த், ஜவாஹிருல்லா, தமிமுன் அன்சாரி ஆகியோருக்கு அவர் நன்றி தெரிவித்தார்.
தமிழகத்தில் 'குடியரசுத் தலைவர் ஆட்சி' வந்துவிடக் கூடாது என்ற உயரிய நோக்கில், அரசுக்கு ஆதரவாக வாக்களித்த இடதுசாரிகள், விசிக, ஐயூஎம்எல் ஆகிய கட்சிகளின் நிலைப்பாட்டை மதிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். தவெக அரசு மீது ஸ்டாலின் முன்வைத்துள்ள மிக முக்கியமான குற்றச்சாட்டு, அதிமுக உறுப்பினர்களை வளைத்தது குறித்தது:
"தூய அரசியல் என்று சொல்லி ஆட்சிக்கு வந்தவர்கள், இன்று அழுக்கு அரசியலில் இறங்கியுள்ளனர். பிளவுபட்ட அதிமுக எனும் குழம்பிய குட்டையில் மீன் பிடித்து, அவர்களின் உறுப்பினர்களை விலைக்கு வாங்கியுள்ளனர்" எனச் சாடினார். உங்களோட Starting-ஏ இப்படி இருந்தா Finishing எப்படி இருக்கும்? இது தூய சக்தியா இல்ல, அடுத்த கட்சி MLA-க்களைத் தூக்குற சக்தியா?” என மக்கள் வருந்தும் நிலையை ஆளுங்கட்சி உருவாக்கிவிட்டதாக அவர் விமர்சித்தார்.
முதலமைச்சர் விஜய்யை நேரடியாக விளித்துப் பேசிய மு.க.ஸ்டாலின், "மாண்புமிகு முதல்வர் அவர்களே, மக்கள் உங்கள் செயல்பாடுகளைக் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆதரவளித்த அதிமுக உறுப்பினர்களுக்கு நீங்கள் கொடுக்கப் போகும் 'Return Gift' என்ன என்பதையும் மக்கள் பார்ப்பார்கள்" எனத் தெரிவித்தார். எங்களைப் பொறுத்தவரை திமுக தனது கொள்கையில் உறுதியாக இருந்து, ஒரு ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாகத் தொடர்ந்து செயல்படும் என அவர் உறுதிபடக் கூறினார். நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக வெற்றி பெற்றாலும், அதன் அரசியல் அறம் குறித்து ஸ்டாலின் எழுப்பியுள்ள இந்தக் கேள்விகள் தமிழக அரசியலில் பெரும் விவாதத்தை உருவாக்கியுள்ளன.