‘புஷ்பா 2’ - சோதனையா? சாதனையா? திரை விமர்சனம்
'புஷ்பா’ படத்தின் ‘ஊ சொல்றீயா மாமா’ பாடம் இந்தியா முழுவதும் வைரலான நிலையில், பாடலின் கிறங்கடிக்கும் குரலுக்காகவும் நடிகை சமந்தாவின் ஆபாச நடன அசைவுக்காகவும் தயாரிப்பாளர்கள் எதிர்பார்த்தை விட கோடிகளில் லாபத்தை அள்ளி திக்குமுக்காட செய்த புஷ்பா படத்தின் 2வது பாகம் ரிலீஸாகி இருக்கிறது.
படம் வெளியாவதற்கு முன்பே முன்பதிவில் ரூ.100 கோடி வசூலானதாக அறிவித்திருந்தார்கள். ரசிகர்களின் எதிர்பார்ப்பை ‘புஷ்பா2: தி ரூல்’ பூர்த்தி செய்திருக்கிறதா என்பதை பார்க்கலாம் வாங்க.
செம்மரங்களை வெட்டும் வேலைக்குச் சென்ற புஷ்பா எப்படி டானாக உருவானான் என்பதை முதல் பாகத்தில் சொல்லியிருந்தவர்கள் இந்த 2ம் பாகத்தில், டானா உருவான புஷ்பாராஜ் ஆட்சி, அதிகாரத்தை எதிர்த்து தான் இருக்கும் இடத்தில் எப்படி டானாக ஆள்கிறான் என்பதைச் சொல்லி இருக்கிறார்கள். திரும்பும் திசையெல்லாம் புஷ்பா ஆட்சிதான். ஒற்றை ஆளாக அல்லு அர்ஜூன் முழு கதையையும் தோளில் சுமந்திருக்கிறார்.
ஆக்ஷன், செண்டிமெண்ட் என நடிப்பிலும் குறையில்லை. புஷ்பா அறிமுகமே அதகளம். சண்டைக்காட்சிகளில் அசுரத்தனமான உழைப்பு ப்ளஸ் தயாரிப்பிலும் பிரம்மாண்டம் காட்டியிருக்கிறார்கள்.
புஷ்பாவை தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து தோற்கடிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் வரும் காவல்துறை அதிகாரியாக பகத் பாசில். அல்லு அர்ஜூன் பகத்திடம் மன்னிப்பு கேட்கும் இடத்தில் பகத் நடிப்பு கிளாஸ். கணவனுக்கு ஆதரவு கொடுக்கும் கதாபாத்திரத்தில் ராஷ்மிகா (ஸ்ரீவள்ளி). கொடுத்த வாய்ப்புக்கு கிளாமரை அள்ளி இறைத்து சிறப்பாக செய்திருக்கிறார். ஜெகபதி பாபு, ராவ் ரமேஷ், சுனில் என துணை கதாபாத்திரங்களும் கச்சிதம்.
மிரஸ்லோ குபா பிரோக்ஸூடைய ஒளிப்பதிவும், விஎஃப்எக்ஸ் பணிகளும் நேர்த்தி. தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் 'புஷ்பா புஷ்பா, சூசேகி’ பாடல்கள் ஹிட். ஃபீலிங்க்ஸ், கிஸ்கிஸா பாடல்கள் ஈர்க்கவில்லை. சாம் சிஎஸ்ஸூடைய பின்னணி இசை காதை பதம் பார்க்காமல் கச்சிதமான மீட்டரில் மாஸ் கூட்டியிருக்கிறது.
3.30 மணி நேரம் ஓடும் கதையில் புஷ்பாவைத் தவிர வேறு ஒன்றும் இல்லை. பகத், புஷ்பாவை வீழ்த்த செய்யும் வில்லத்தனம் எல்லாம் அதர பழசு. ராஷ்மிகா- அல்லு அர்ஜூன் காதல் காட்சிகளிலும் ஈர்ப்பில்லை. முதல் பாதியில் அல்லு அர்ஜூன் vs பகத் என நகரும் கதை இரண்டாம் பாதியில் செண்டிமெண்ட் நோக்கி நகர்கிறது. ஒரு கட்டத்தில் புஷ்பா படம் பார்க்கிறோமோ அல்லது புஷ்பா சீரியல் பார்க்கிறோமோ என குழம்பும் அளவுக்கு ஓவர் டோஸ்.
முதல் பாகத்தில் புஷ்பா கையை கட்டி விட்டதால் காலில் சண்டை போடுவார். அதனால், இரண்டாம் பாகத்தில் கை, கால் இரண்டையும் கட்டிவிடுவார்கள். அவர் வாயில் சண்டை போடுகிறார்.
புஷ்பா நினைத்தால் ஓவர் நைட்டில் முதல்வரை மாற்றலாம், இலங்கை எல்லையைத் தாண்டலாம், ஹெலிகாப்டர் வாங்கலாம் என தெலுங்கு படங்களுக்கே உரித்தான எந்த லாஜிக்கும் இல்லாமல் இஷ்டத்துக்கு கபடி விளையாடி இருக்கிறார்கள். ஆனால்... அதெல்லாம் பாலகிருஷ்ணா சாருடைய படங்களுக்கு மட்டுமே ஓகே பாஸ்? ’புஷ்பா1’ தெறி ஹிட் என்றால், புஷ்பா 2 ரொம்பவே சுமார் ரகம்
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!