வீட்டு வாசலில் விசில் கோலம் போடுங்க... மாசம் ஒருமுறை நேர்ல வருவேன்” - தேர்தல் அறிக்கையை வெளியிட்டு விஜய் எமோஷனல் அட்டாக்!
தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கி மின்னல் வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்க, ‘தமிழக வெற்றிக் கழகம்’ தனது தார்மீக ஆயுதமான தேர்தல் அறிக்கையை இன்று நுங்கம்பாக்கத்தில் தட்டித் தூக்கியுள்ளது.
நட்சத்திர ஓட்டலில் நடந்த பிரம்மாண்ட விழாவில், ‘மக்களின் தேர்தல் அறிக்கை’ என்ற பெயரில் இதனை வெளியிட்ட விஜய், அதன் முதல் பிரதியை ஒரு விவசாயியிடம் வழங்கி நெகிழ்ச்சியை ஏற்படுத்தினார். ஆசிரியை, ஆட்டோ டிரைவர், அங்கன்வாடி ஊழியர் என அடித்தட்டு மக்களின் கைகளில் தனது கனவு அறிக்கையைக் கொடுத்து, “இது உங்களுக்கான ஆட்சி” என்பதைச் சொல்லாமல் சொல்லிவிட்டார் தளபதி.
அறிக்கையை வெளியிட்டுப் பேசிய விஜய், தொண்டர்களையும் பொதுமக்களையும் உருகவைக்கும் வகையில் தனது உரையை அமைத்திருந்தார். “நான் களம் இறக்கியிருக்கும் வேட்பாளர்கள் யாரோ கிடையாது, அவர்கள் உங்கள் வீட்டுப் பிள்ளைகள். அவர்களுக்கு நீங்கள் போடும் ஓட்டு, உங்களுக்கு நீங்களே போட்டுக்கொள்வது போன்றது.
உங்கள் வீட்டுப் பிள்ளையான எனக்கு ஒரே ஒரு வாய்ப்பு கொடுங்கள்; மே 4-ம் தேதி தமிழகத்தில் ஒரு புதிய ஒளி பிறக்கும்,” என நம்பிக்கையூட்டினார். குறிப்பாகத் தாய்மார்களிடம் ஒரு அன்பான வேண்டுகோளை வைத்தார். “எனக்காக உங்கள் வீட்டு வாசலில் நம்முடைய ‘விசில்’ சின்னத்தை கோலமாகப் போடுங்கள், அதுதான் நீங்கள் எனக்குத் தரும் ஆகச்சிறந்த ஆதரவு” என அவர் கேட்டபோது அரங்கம் அதிரும் வகையில் கரவொலி எழுந்தது.
தாம் போட்டியிடும் தொகுதிகள் குறித்துப் பேசிய விஜய், “தமிழகத்தின் அனைத்துத் தொகுதிகளும் எனக்கு ஒன்றுதான் என்றாலும், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகள் எனக்கு எப்போதும் ஸ்பெஷல். அங்கு நான் வெறும் அரசியல்வாதி அல்ல, உங்கள் வீட்டுப் பிள்ளை. மாதம் ஒருமுறை கண்டிப்பாக எனது தொகுதிக்கு வருவேன், என்னைச் சந்திப்பது என்பது இனி மிகவும் எளிதான விஷயம்.
உங்கள் தேவைகளை நீங்கள் கேட்காமலேயே நான் நிறைவேற்றுவேன்,” என உறுதி அளித்தார். “வெற்றி நிச்சயம், நல்லதே நடக்கும்” என அவர் பேச்சை முடிக்க, தவெக தொண்டர்கள் ‘விசில்’ அடித்துத் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். விஜய்யின் இந்த அதிரடி மற்றும் எமோஷனல் பேச்சு, இப்போது ஒட்டுமொத்த தமிழக அரசியலிலும் ஒரு புதிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது.