படம் பார்க்க சென்றவர்களுக்கு 17 நிமிடம் விளம்பரம்! PVR-க்கு ரூ.75,000 செலுத்த உத்தரவு!
சினிமா பார்க்கச் சென்றபோது படம் தொடங்க வேண்டிய நேரத்துக்கு பிறகும் தொடர்ந்து விளம்பரங்கள் மற்றும் டிரெய்லர்கள் ஒளிபரப்பப்பட்டதாக கூறி தொடரப்பட்ட வழக்கில், ஹைதராபாத் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் PVR நிறுவனத்துக்கு எதிராக முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது.ஹைதராபாத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் இரவு 10.35 மணிக்கு தொடங்கும் திரைப்படத்துக்கு 2 டிக்கெட்டுகளை முன்பதிவு செய்திருந்தார். அவர் குறிப்பிட்ட நேரத்துக்கு முன்பாகவே திரையரங்குக்குச் சென்று இருக்கையில் அமர்ந்தார்.
ஆனால், படம் தொடங்க வேண்டிய நேரத்திலும் திரையில் விளம்பரங்கள் மற்றும் டிரெய்லர்கள் தொடர்ந்து ஒளிபரப்பப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் திரைப்படம் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தைவிட 17 நிமிடங்கள் தாமதமாக தொடங்கியது. இதன் காரணமாக தனது இரவு நேர பயணத் திட்டமும் பாதிக்கப்பட்டதாக அந்த வழக்கறிஞர் நுகர்வோர் ஆணையத்தில் புகார் அளித்தார்.
திரைப்படம் தொடங்குவதற்கு முன்பு ஒளிபரப்பப்படும் பொது சேவை விளம்பரங்கள் தொடர்பாக தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் வழிகாட்டுதல்கள் இருப்பதாக புகார்தாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. குறிப்பிட்ட நேர வரம்பை மீறி விளம்பரங்களை ஒளிபரப்பியது சேவைக் குறைபாடு மற்றும் நியாயமற்ற வர்த்தக நடைமுறை என அவர் வாதிட்டார்.
இதற்கு PVR நிர்வாகம், விளம்பரங்கள், டிரெய்லர்கள் மற்றும் பொது சேவை தகவல்களை திரையிடுவது தங்களது வணிக நடவடிக்கையின் ஒரு பகுதி என்றும், திரைப்படத்திற்கு முன்பு ஒளிபரப்பப்பட்ட தகவல்கள் எழுத்தறிவு, விவசாயம், பெண்கள் நலன், தூய்மை உள்ளிட்ட பொது நலன் சார்ந்தவை என்றும் வாதிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த வாதத்தை நுகர்வோர் ஆணையம் ஏற்கவில்லை. படம் தொடங்க வேண்டிய நேரத்துக்கு அப்பாலும் நீண்ட நேரம் விளம்பரங்களை ஒளிபரப்பியதை ஆணையம் கவனத்தில் எடுத்தது. இதனை நியாயமற்ற வர்த்தக நடைமுறையாக ஆணையம் கருதியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து, புகார்தாரருக்கு ஏற்பட்ட சிரமத்துக்காக ரூ.20,000 இழப்பீடும், வழக்குச் செலவுக்காக ரூ.5,000-மும் வழங்க உத்தரவிடப்பட்டது. மேலும் ரூ.50,000 அபராதத் தொகையை மாவட்ட நுகர்வோர் நல நிதியில் செலுத்த PVR-க்கு உத்தரவிடப்பட்டது. இதனால் மொத்த உத்தரவு தொகை ரூ.75,000 ஆகிறது. எதிர்காலத்தில் இதுபோன்ற நடைமுறையை தொடரக்கூடாது என்றும் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.இதனால், திரைப்பட டிக்கெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள காட்சி நேரத்துக்கு ஏற்ப படம் தொடங்க வேண்டும் என்பது தொடர்பான நுகர்வோர் உரிமை விவாதம் மீண்டும் கவனம் பெற்றுள்ளது.