நண்பர்கள் கூறிய தகவலால் மனைவியுடன் தகராறு… இளம்பெண்ணைக் கொன்ற கணவர் போலீசில் சரண்!

 

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே மனைவியைக் கொலை செய்ததாகக் கூறப்படும் கணவர், காவல்நிலையத்தில் சரணடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எரியோடு அருகே உள்ள பாண்டியன் நகரைச் சேர்ந்த அஜித்குமார் (28), தனது மனைவி சுவேதாவுடன் (24) வசித்து வந்தார். இந்நிலையில், நண்பர்களுடன் மது அருந்திக்கொண்டிருந்தபோது, சுவேதாவின் நடத்தை குறித்து நண்பர்கள் சிலர் அஜித்குமாரிடம் பேசியதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து மனைவியிடம் அவர் தகராறில் ஈடுபட்டதாகவும், அந்தத் தகராறு முற்றியதில் சுவேதாவைக் கொலை செய்ததாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. பின்னர் அஜித்குமார் போலீசில் சரணடைந்துள்ளார்.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். கொலைக்கான முழுமையான காரணம் மற்றும் சம்பவத்தின் பின்னணி குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது