2026-27 கல்வியாண்டிற்கான காலாண்டு, அரையாண்டு தேர்வு தேதிகள் வெளியீடு!

 

தமிழகப் பள்ளிக்கல்வித்துறை நடப்பு 2026-27 ஆம் கல்வியாண்டிற்கான பள்ளி நாட்காட்டியை வெளியிட்டுள்ளது. இதில் பள்ளி மாணவர்களுக்கான மிக முக்கியமான காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் தொடங்கும் தேதிகள் மற்றும் அதற்கான விடுமுறை விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பள்ளிகள் தொடங்கப்பட்ட பிறகு மாணவர்களுக்கு நடத்தப்படும் முதலாவது முக்கியத் தேர்வான காலாண்டுத் தேர்வு வரும் செப்டம்பர் 17-ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 25-ம் தேதி வரை நடைபெறும். தேர்வுகள் முடிந்ததும், செப்டம்பர் 26-ஆம் தேதி முதல் அக்டோபர் 4-ஆம் தேதி வரை மாணவர்களுக்குக் காலாண்டுத் தேர்வு விடுமுறை அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் பருவத்திற்கான அரையாண்டுத் தேர்வுகள் நடப்பு கல்வியாண்டில் டிசம்பர் 16-ம் தேதி தொடங்கி டிசம்பர் 23-ஆம் தேதி வரை நடத்தப்பட உள்ளன. தேர்வு முடிவடைந்த மறுநாள், அதாவது டிசம்பர் 24-ஆம் தேதி முதல் 2027 ஜனவரி 3-ஆம் தேதி வரை மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை அளிக்கப்படும் என்று நாட்காட்டியில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜனவரி 4-ஆம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும்.

நடப்பு 2026-27 கல்வியாண்டின் இறுதிப் பள்ளி வேலை நாளாக 2027 ஏப்ரல் 23-ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றோடு பள்ளி வகுப்புகள் நிறைவடைவதைத் தொடர்ந்து, 2027 ஏப்ரல் 24-ஆம் தேதி முதல் மாணவர்களுக்கான கோடை விடுமுறை தொடங்கும் எனப் பள்ளிக்கல்வித்துறை தெளிவுபடுத்தியுள்ளது.