மாணவர்களுக்கு 9 நாட்கள் காலாண்டு விடுமுறை! மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது ?
தமிழகத்தில் காலாண்டு தேர்வு விடுமுறை எப்போது முடிவடையும், பள்ளிகள் மீண்டும் எப்போது திறக்கப்படும் என்ற எதிர்பார்ப்புக்கு தற்போது பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, அக்டோபர் 5-ம் தேதி அனைத்து வகைப் பள்ளிகளும் மீண்டும் திறக்கப்பட உள்ளன.தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு காலாண்டுத் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 25-ம் தேதி வரை தேர்வுகள் நடைபெறுகின்றன.
இதையடுத்து, அனைத்து அரசு, அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளுக்கு செப்டம்பர் 26-ம் தேதி முதல் அக்டோபர் 4-ம் தேதி வரை காலாண்டு தேர்வு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த விடுமுறை முடிந்து அக்டோபர் 5-ம் தேதி, திங்கட்கிழமை பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என பள்ளிக் கல்வி இயக்குநரின் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகள் திறக்கும் நாளிலேயே மாணவர்களுக்கு காலாண்டுத் தேர்வு விடைத்தாள்கள் வழங்கப்பட்டு, மதிப்பெண்கள் உரிய பதிவேடுகள் மற்றும் EMIS-ல் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்குமாறு தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.மேலும், 1 முதல் 7-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு இரண்டாம் பருவத்துக்கான பாடநூல்கள் பள்ளி திறக்கும் நாளிலேயே வழங்கப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
காலாண்டு விடுமுறை நாட்களில் மாணவர்கள் ஓய்வு எடுப்பதுடன், ஆசிரியர்கள் வழங்கியுள்ள Assignment-களை முடிக்கவும், ஒவ்வொரு நாளும் ஒரு பாடத்தைப் படிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்கள் விடுமுறை நாட்களில் தொடர்ந்து பயிற்சி மேற்கொள்ளுமாறு ஆசிரியர்கள் ஆலோசனை வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, காலாண்டு விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்த பள்ளிக்கல்வித்துறை தடை விதித்துள்ளது. உத்தரவை மீறி சிறப்பு வகுப்பு நடத்தப்பட்டு ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் தலைமை ஆசிரியரே முழுப் பொறுப்பேற்க வேண்டும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.எனவே, தமிழக மாணவர்களுக்கு செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 4 வரை காலாண்டு விடுமுறை; அக்டோபர் 5-ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறப்பு என்பது தற்போதைய அதிகாரப்பூர்வ அறிவிப்பாகும்.