ராஞ்சியில் சட்டப்பேரவை நோக்கி மாணவர்களின் நூதனப் போராட்டம்... தண்ணீர் பீய்ச்சியடித்ததும் குத்தாட்டம் போட்ட இளைஞர்கள்... வைரல் வீடியோ!
ஜார்க்கண்ட் மாநில அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வுகளில் பெரும் முறைகேடுகள் நடந்ததாகவும், வினாத்தாள் கசிந்ததாகவும் கூறி அங்குள்ள மாணவ மாணவிகள் கடந்த சில நாட்களாகத் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விவகாரத்தை உடனடியாக சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்பதுதான் அவர்களின் மிக முக்கிய கோரிக்கையாக இருந்து வருகிறது. அரசுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளில் எந்தவித உடன்பாடும் எட்டப்படாததால், ஆயிரக்கணக்கான மாணவர்கள் திரண்டு தலைநகர் ராஞ்சியில் உள்ள சட்டப்பேரவை நோக்கிப் பேரணியாகப் புறப்பட்டனர்.
இவர்களைத் தடுப்பதற்காகக் காவல்துறையினர் ஆங்காங்கே இரும்புத் தடுப்புகளை அமைத்துச் பலத்த பாதுகாப்பு வளையத்தை உருவாக்கியிருந்தனர். மாணவர்கள் போலீசாரின் தடுப்புகளை உடைக்க முயன்றதால் அங்குப் பெரும் பதற்றமான சூழல் நிலவியதுடன் கூட்டத்தைக் கலைக்க போலீசார் முதலில் தடியடி நடத்தினர். பின்னர் கண்ணீர் புகைக்குண்டுகளையும் வீசிய போதிலும் மாணவர்கள் கலைந்து செல்லாமல் நின்றனர். இதனால் ராட்சத வாகனங்கள் வரவழைக்கப்பட்டு மாணவர்கள் மீது தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டது.
போலீசார் தண்ணீரை அடித்ததும் மாணவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர்கள் போலீஸ் அடித்த தண்ணீரை மழைக் குளியல் போல் நினைத்து குத்தாட்டம் போடத் தொடங்கினர். சில மாணவர்கள் வாகனத்தின் முன்பே நின்று கைகளைத் தட்டி உற்சாகமாக நடனமாடியதுடன் தங்களை எந்த முறையிலும் கலைக்க முடியாது என்று சவால் விட்டனர். தண்ணீரில் நனைந்தபடியே அவர்கள் ஆடிய இந்தச் சுவாரஸ்யமான காணொளிகள் சமூக வலைத்தளங்களில் பரவி அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.