ரயில் ஏசி பெட்டிகளில் ஆர்.ஏ.சி. பயணிகளுக்கும் கட்டாயம் போர்வை, கம்பளி வழங்க உத்தரவு!
விரைவு ரயில்களின் ஏசி பெட்டிகளில் ஆர்.ஏ.சி. வசதியில் பயணிக்கும் பயணிகளுக்கும் கட்டாயம் போர்வை, கம்பளி மற்றும் தலையணை வழங்கப்பட வேண்டும் என ரயில்வே வாரியம் அனைத்து மண்டலங்களுக்கும் உத்தரவிட்டுள்ளது.
ஏசி பெட்டிகளில் பயணிக்கும் ஆர்.ஏ.சி. பயணிகள் அமர்ந்து செல்ல மட்டுமே அனுமதிக்கப்பட்ட சூழலில், அவர்களுக்கு போர்வை மற்றும் கம்பளிகள் வழங்கப்படாமல் வந்ததால் கடும் அவதிக்குள்ளாகினர்.
ஏற்கனவே இதுகுறித்த வழிகாட்டுதல்கள் இருந்தபோதிலும் பல ரயில்களில் இது பின்பற்றப்படுவதில்லை எனப் புகார்கள் எழுந்தன. இதனையடுத்து, இந்த நடைமுறையை அனைத்து மண்டலப் பொதுமேலாளர்களும் தவறாமல் உறுதி செய்ய வேண்டும் என ரயில்வே வாரியம் தற்போதைய புதிய சுற்றறிக்கையில் வலியுறுத்தியுள்ளது.
ஆர்.ஏ.சி. பயணிகளும் பயணத்திற்காக முழு கட்டணத்தையும் செலுத்துவதால், அவர்களுக்குப் போர்வை மற்றும் தலையணை வழங்குவது அவசியமான ஒன்றாகும். பொருட்கள் பற்றாக்குறையைக் காரணம் காட்டாமல் இந்த உத்தரவை ஊழியர்கள் முறையாகச் செயல்படுத்த வேண்டும் என ரயில்வே பயணிகள் மற்றும் தொழிற்சங்கத்தினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.