அண்ணாமலையின் புதிய இயக்கத்தில் இணையும்  ராகவா லாரன்ஸ்? 

 

பாஜகவில் இருந்து முறைப்படி விலகிய அண்ணாமலை, மக்கள் பணியை முன்னெடுக்கும் நோக்கில் ‘We the leaders’ என்ற புதிய மக்கள் இயக்கத்தைத் தொடங்கியுள்ளார். இந்த புதிய அமைப்பில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் தங்களை ஆர்வமுடன் இணைத்து வருகின்றனர். இதனுடன் சேர்த்து பாஜகவில் இருந்த சில முக்கியப் பொறுப்பாளர்களும், நிர்வாகிகளும் அண்ணாமலைக்கு ஆதரவு தெரிவித்து அவரது புதிய இயக்கத்தில் கைகோர்த்து வருவது அரசியல் வட்டாரத்தில் பேசும்பொருளாக மாறியுள்ளது.

இந்தச் சூழ்நிலையில் தமிழ்த் திரையுலகின் பிரபல நடிகரும், சமூக ஆர்வலருமான ராகவா லாரன்ஸ், அண்ணாமலையின் இந்த புதிய இயக்கத்தில் இணையப் போவதாகப் புதிய தகவல்கள் சமூக வலைதளங்களில் உலா வருகின்றன. லாரன்ஸ் ஏற்கனவே பல்வேறு சமூகப் பணிகளைத் தனது அறக்கட்டளை மூலம் செய்து வருவதால், மக்களின் முன்னேற்றத்திற்காகத் தொடங்கப்பட்டுள்ள இந்த அமைப்பில் அவர் இணைய அதிக வாய்ப்புள்ளதாகப் பலராலும் பேசப்பட்டு வருகிறது. இதனால் அண்ணாமலையின் இயக்கம் அடுத்த கட்டத்தை நோக்கி நகரும் என அவரது ஆதரவாளர்கள் நம்புகின்றனர்.

முன்னதாக நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் ராகவா லாரன்ஸ் இணையக் கூடும் என்று சினிமா மற்றும் அரசியல் வட்டாரங்களில் பரவலாகக் கூறப்பட்டு வந்தது. இந்தச் சூழ்நிலையில் அவர் அண்ணாமலையின் புதிய அமைப்பில் இணையப் போகிறார் என்ற இந்தத் திடீர் தகவல் அவரது ரசிகர்கள் இடையே பெரும் ஆச்சரியத்தையும் விவாதத்தையும் ஏற்படுத்தி உள்ளது. எனினும் இந்தத் தகவல் குறித்து நடிகர் ராகவா லாரன்ஸ் தரப்பிலோ அல்லது அண்ணாமலை தரப்பிலோ இதுவரை எவ்வித அதிகாரப்பூர்வ விளக்கமும் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.