‘சகோதரர் ஸ்டாலின்’ எனப் புகழ்ந்த ராகுல் காந்தி... தொகுதி மறுவரையறை விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு - அரசியல் களத்தில் விவாதம்!
மக்களவைத் தொகுதிகளை 850 இடங்களாக விரிவாக்கம் செய்வது ஜனநாயகத்தை முடிவுக்குக் கொண்டு வரும் எனத் தெரிவித்துள்ள மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தமிழர் விரோத சக்திகளுக்கு எதிராக உறுதியாக நிற்பவர் எனக் குறிப்பிட்டுத் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினைச் ‘சகோதரர்’ எனப் புகழ்ந்து பதிவிட்டுள்ளார்.
தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, "மக்களவைத் தொகுதிகளை 850 இடங்களாக விரிவாக்கம் செய்வது ஜனநாயகத்தை முடிவுக்குக் கொண்டு வரும். இந்தியாவின் தேர்தல் வரைபடத்தை மாற்றி அமைக்க பாஜக, ஆர்.எஸ்.எஸ்.-க்கு வரம்பற்ற வாய்ப்பை வழங்கும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
"தமிழர் விரோத சக்திகளுக்கு எதிராக உறுதியாக நிற்பவர் சகோதரர் ஸ்டாலின். தேசிய நலனுக்காகவும், தமிழக நலனுக்காகவும், அரசியலமைப்பைப் பாதுகாக்கவும், நாம் அனைவரும் ஒன்றிணைந்து இந்த மசோதாவைத் தோற்கடிக்க வேண்டும்" என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.
திமுகவுடன் கூட்டணியில் இருந்தபோது இந்தியாவில் தாம் ‘பிரதர்’ என அழைக்கும் ஒரே தலைவர் மு.க. ஸ்டாலின் தான் என ராகுல் காந்தி மேடைகளில் பேசியிருந்த நிலையில், தவெகவுடன் கூட்டணி அமைத்த பிறகு அவரது பிறந்தநாள் வாழ்த்தில் அச்சொல் இடம்பெறவில்லை என சுட்டிக்காட்டப்படுகிறது. தற்போது திமுக தலைவரைச் சந்திக்க வரும் சூழலில் மீண்டும் ‘சகோதரர்’ என்ற வார்த்தையை அவர் பயன்படுத்தியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பல்வேறு விமர்சனங்களைக் கிளப்பியுள்ளது.