இன்று தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி... காங்கிரஸ் பயிற்சி முகாம் நிறைவு விழா!
மகாபலிபுரத்தில் கடந்த 10 நாட்களாக நடைபெற்று வந்த காங்கிரஸ் மாவட்டத் தலைவர்களுக்கான பயிற்சி முகாம் நிறைவடைவதை முன்னிட்டு, நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று தமிழகம் வருகிறார்.
சென்னை வருகை: டெல்லியிலிருந்து பயணிகள் விமானம் மூலம் காலை 10:05 மணிக்குச் சென்னை சர்வதேச விமான நிலையம் வந்து சேரும் ராகுல் காந்திக்கு, தமிழ்நாடு காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர். சென்னை விமான நிலையத்திலிருந்து மகாபலிபுரம் செல்லும் வழியில் தாம்பரம், வண்டலூர், கேளம்பாக்கம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப் பார்ட்டி நிர்வாகிகள் ஏற்பாடு செய்துள்ளனர்.
நீட்டால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆறுதல்: கோவை மற்றும் சேலம் பகுதிகளைச் சேர்ந்த, நீட் தேர்வால் உயிரிழந்த 4 மாணவ-மாணவிகளின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினரைச் சந்தித்து ராகுல் காந்தி ஆறுதல் கூறுகிறார்.
காலை 11:30 மணியளவில் மகாபலிபுரம் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக விடுதிக்குச் சென்று, பயிற்சி முகாமில் பங்கேற்றுள்ள 74-க்கும் மேற்பட்ட மாவட்டத் தலைவர்களுடன் கலந்துரையாடி ஆலோசனைகளை வழங்குகிறார்.
பயிற்சி முகாமின் நிறைவாக மாவட்டத் தலைவர்கள் மற்றும் கட்சியினருடன் குழுப் புகைப்படம் எடுத்துக் கொள்கிறார். நிகழ்ச்சிகள் அனைத்தையும் முடித்துக்கொண்டு இன்று மாலை 7:00 மணியளவில் ராகுல் காந்தி மீண்டும் டெல்லி புறப்பட்டுச் செல்கிறார். அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் பொருட்டு வழிநெடுகிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.