தமிழகத்தில் ராகுல் காந்தி   இன்று 3 மாவட்டங்களில் அதிரடி பிரச்சாரம் - கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு!

 

தமிழக சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரம் நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி இன்று (ஏப்.20) தமிழகத்தில் அதிரடிப் பயணம் மேற்கொள்கிறார். கன்னியாகுமரி, நெல்லை மற்றும் தூத்துக்குடி ஆகிய 3 தென் மாவட்டங்களில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அவர் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபடுகிறார். இதற்காக டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் கேரளா வரும் அவர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாகத் தமிழக எல்லைக்குள் நுழைகிறார்.

                                                                                   

ராகுல் காந்தியின் இன்றைய பயணத் திட்டத்தின்படி, பகல் 11.30 மணிக்கு கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகிறார். அதனைத் தொடர்ந்து பகல் 1 மணிக்கு நெல்லை மாவட்டம் நான்குனேரிக்குச் செல்லும் அவர், அங்குள்ள சுங்கச்சாவடி அருகே அமைக்கப்பட்டுள்ள மேடையில் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை ஆதரித்துப் பேசுகிறார். பின்னர் பிற்பகல் 2.15 மணிக்குத் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தொகுதிக்கு உட்பட்ட சாயர்புரத்தில் தனது இறுதிக்கட்ட பிரசாரத்தை முன்னெடுக்கிறார்.

தென் தமிழகத்தில் ராகுல் காந்தியின் வருகையையொட்டி காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சித் தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர். அவரது வருகையையொட்டி 3 மாவட்டங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதுடன், முக்கிய இடங்களில் டிரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை தனது பிரசாரத்தை முடித்துக்கொண்டு இரவு 8 மணி அளவில் தூத்துக்குடி விமான நிலையத்திலிருந்து அவர் மீண்டும் டெல்லிக்குப் புறப்படுகிறார். தேர்தல் களம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், ராகுலின் இந்த வருகை அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.