விஜய் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்கிறார் ராகுல் காந்தி!  

 

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தமிழக முதல்வராகப் பதவியேற்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க விழாவில் கலந்துகொள்வதற்காக, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி இன்று டெல்லியில் இருந்து சென்னை வருகிறார். சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று காலை நடைபெறும் இந்த விழாவில், ஆளுநர் அர்லேகர் விஜய்க்குப் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி நேரில் வந்து வாழ்த்துவது, தவெக மற்றும் காங்கிரஸ் இடையேயான அரசியல் நெருக்கத்தை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

இதற்காக ராகுல் காந்தி இன்று காலை 6:00 மணிக்கு டெல்லியில் இருந்து ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் புறப்பட்டு, காலை 8:40 மணிக்குச் சென்னை உள்நாட்டு விமான நிலையத்தை வந்தடைகிறார். விமான நிலையத்தின் 4-வது முனையத்திற்கு வரும் அவருக்குச் சென்னை மாநகர காங்கிரஸ் நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளிக்க உள்ளனர். அங்கிருந்து அவர் குண்டு துளைக்காத காரில் பலத்த பாதுகாப்புடன் நேரடியாகப் பதவியேற்பு விழா நடைபெறும் நேரு உள்விளையாட்டு அரங்கிற்கு அழைத்துச் செல்லப்படுகிறார்.

பதவியேற்பு விழா இனிதே முடிந்ததும், இன்று பிற்பகலே ராகுல் காந்தி மீண்டும் ஏர் இந்தியா விமானம் மூலம் டெல்லிக்குத் திரும்பிச் செல்லத் திட்டமிட்டுள்ளார். ராகுல் காந்தியின் வருகையை முன்னிட்டுச் சென்னை விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் மற்றும் தமிழகப் போலீசார் இணைந்து ஐந்தடுக்குப் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளனர். முக்கியப் பிரமுகர்கள் வந்து செல்லும் பாதைகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதுடன், விமான நிலைய வளாகம் முழுவதும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.