ராகுல் காந்தி - முதலமைச்சர் விஜய் சந்திப்பு ரத்து; எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்த முடிவு!

 

காவிரி நீர் விவகாரம் தொடர்பாகத் தமிழ்நாட்டில் பதற்றமான சூழல் நிலவி வரும் வேளையில், சென்னை வந்துள்ள மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் இடையிலான சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ள செய்தி வெளியாகியுள்ளது.

மகாபலிபுரத்தில் நடைபெறும் தமிழ்நாடு காங்கிரஸ் அமைப்பின் 10 நாள் மாவட்டத் தலைவர்கள் பயிற்சி முகாமின் நிறைவு விழாவில் பங்கேற்பதற்காக ராகுல் காந்தி இன்று சென்னை வருகிறார்.  முன்னதாக, இந்த சென்னை பயணத்தின் போது அவர் முதலமைச்சர் விஜய்யைச் சந்தித்துக் காவிரி நீர் விவகாரம் குறித்துப் பேசுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அச்சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.

காவிரி நதிநீர் விவகாரத்தில் கர்நாடக அரசு தமிழகத்திற்கு உரிய தண்ணீரைத் திறந்துவிட மறுத்து வருகிறது. இந்நிலையில், அம்மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடக்கும் சூழலில், ராகுல் காந்தி தமிழகத்தின் உரிமைகளுக்கு ஆதரவாகப் பேசாமல் மௌனம் காப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு ஆதரவாக குரல் கொடுக்காத ராகுல் காந்தியின் நிலையை கண்டித்தும், அவரது மௌனத்தைக் கண்டித்தும் தமிழக எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளன.