ரெயில் ஒன்' செயலி மூலம் டிக்கெட் எடுத்தால் 3% கட்டணச் சலுகை!  

 

'ரெயில் ஒன்' செயலி மூலம் பயணச்சீட்டு முன்பதிவு செய்வோருக்கான கட்டணச் சலுகை நீட்டிக்கப்படுவதாக இரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. முன்பு தனித்தனியாகச் செயல்பட்டு வந்த பல்வேறு செயலிகளின் சேவைகளை ஒருங்கிணைத்து இந்த ஒரே செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் முன்பதிவு பயணச்சீட்டு, முன்பதிவில்லாத சாதாரண பயணச்சீட்டு மற்றும் நடைமேடைப் பயணச்சீட்டுகளைப் பெற முடியும். மேலும் இரயில்கள் வரும் நேரம் மற்றும் பெட்டிகளில் உள்ள குறைகள் குறித்த புகார்களையும் இதன் மூலம் உடனடியாகப் பதிவு செய்யலாம்.

பணமில்லா டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கவும் வரிசையில் மக்கள் நிற்பதைத் தவிர்க்கவும் இந்தச் சலுகை வழங்கப்பட்டு வருகிறது. செயலி மூலம் முன்பதிவில்லாத பயணச்சீட்டு எடுப்போருக்கு வழங்கப்பட்டு வந்த 3 சதவீத கட்டணச் சலுகை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் 2027-ஆம் ஆண்டு மார்ச் 31-ந் தேதி வரை இந்த 3 சதவீதக் கட்டணக் கழிவுச் சலுகையைப் பயணிகள் தொடர்ந்து பெற முடியும். இணைய வங்கிச் சேவை மற்றும் பல்வேறு அட்டைகள் மூலம் கட்டணம் செலுத்திப் பொதுமக்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இதேபோல ஆர்-வாலட் மூலம் பயணச்சீட்டு முன்பதிவு செய்வோருக்கான 3 சதவீத பணத் திரும்பப் பெறும் சலுகையும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தச் சலுகையானது வரும் 2028-ம் ஆண்டு ஆகஸ்டு 24-ந் தேதி வரை பயன்பாட்டில் இருக்கும் என இரயில்வே துறை தெரிவித்துள்ளது. இரயில்வே நிர்வாகத்தின் இந்த அறிவிப்பு தினமும் இரயில்களில் பயணம் செய்யும் லட்சக்கணக்கான மக்களுக்குப் பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது. பயணிகளின் சிரமத்தைக் குறைக்கும் வகையில் எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கை பொதுமக்கள் இடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.