இன்று முதல் இரவு நேர மின்சார ரயில்கள் வழக்கம்போல இயங்கும் - ரயில்வே துறை அறிவிப்பு!
சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் ரூ.842 கோடியில் மறு சீரமைப்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அதன் ஒரு பகுதியாக இரும்பு நடைமேம்பாலம் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வந்தது.
இந்தப் பணியின் காரணமாகக் கடந்த 25-ந்தேதி முதல் நேற்று வரையில் இரவு 11.15 மணி முதல் அதிகாலை 4.15 மணி வரை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு இடையே இருமார்க்கமாகவும் இரவு நேர மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட்டிருந்தன.
இந்நிலையில், ரத்து செய்யப்பட்டிருந்த காலக்கெடு நேற்றுடன் நிறைவடைந்ததை அடுத்து, இன்று முதல் கடற்கரை - தாம்பரம் இடையே இரவு நேர மின்சார ரெயில்கள் வழக்கம்போல இயக்கப்படும் என்று ரெயில்வே அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
அடுத்தகட்டமாக ரெயில் மாற்றங்கள் குறித்த புதிய அறிவிப்பு ரெயில்வே நிர்வாகம் சார்பில் வரும் வரையில் இதே நடைமுறை தொடரும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.