குடையோடு கிளம்புங்க... 7 நாட்களுக்கு மழை நீடிக்கும் ... !
தமிழகப் பகுதிகளில் நிலவி வரும் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த ஏழு நாட்களுக்குத் தொடர்ந்து மழை நீடிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள இந்த மாறுபாடுகளால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்யக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக இன்று ஜூன் 27 ம் தேதி திருவள்ளூர் மற்றும் நீலகிரி உட்பட ஏழு மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. அதே நேரத்தில் சென்னையின் முக்கியப் பகுதிகள் மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் கனமழை மற்றும் பலத்த காற்றின் போது தேவையின்றி வெளியே செல்வதைத் தவிர்த்து தகுந்த பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகள் தரப்பில் அறிவுறுத்தப்படுகிறார்கள். தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் மற்றும் நீர்நிலைகளுக்கு அருகில் இருப்பவர்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.