தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்க சாதகமான சூழல் 16 மாவட்டங்களுக்கு கனமழை  அலெர்ட்! 

 

 இந்தியாவில் நடப்பு ஆண்டிற்கான தென்மேற்கு பருவமழை அடுத்த 3 முதல் 4 நாட்களில் கேரளா மற்றும் தமிழகத்தின் சில பகுதிகளில் தொடங்குவதற்கு சாதகமான வானிலை சூழல் நிலவி வருகிறது. அரபிக்கடல், லட்சத்தீவு மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் பருவமழை ஏற்கனவே கணிசமாக முன்னேறியுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருவதோடு, வெயிலின் தாக்கமும் படிப்படியாகக் குறைந்து மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, தமிழகத்தின் மேற்கு மற்றும் வடக்கு மாவட்டங்களில் அடுத்த சில நாட்களுக்கு கனமழை நீடிக்க வாய்ப்புள்ளது. குறிப்பாக நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருவண்ணாமலை உள்ளிட்ட 16 மாவட்டங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றும் வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டியுள்ள தென் தமிழக கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் ஜூன் 4 ஆம் தேதி வரை மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஜூன் 2 ஆம் தேதிக்கு பிறகு வெயிலின் அளவு இயல்பான நிலைக்குத் திரும்பும் என்றும் வானிலை அதிகாரிகள் கூறியுள்ளனர். பருவமழையின் தொடக்கத்தால் விவசாயப் பணிகளை மேற்கொள்வதற்கு ஏதுவான சூழல் உருவாகியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.