தொடரும் கனமழை...  இரவு   9 மாவட்டங்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை!

 

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதன் காரணமாக, கடந்த சில நாட்களாகவே மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாகக் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. கோடை வெப்பத்தைத் தணித்து நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தியுள்ள இந்த தொடர் மழையானது, பொதுமக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதன் தொடர்ச்சியாக, தமிழகத்தில் இன்று ஜூன் 11-ம் தேதி இரவு  9 முக்கிய மாவட்டங்களில் மழை நீடிக்க வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தற்பொழுது ஒரு புதிய அவசர எச்சரிக்கையை விடுத்துள்ளது. வானிலை மையம் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பின்படி, குறிப்பிட்ட மாவட்டங்களில் உள்ள ஒருசில பகுதிகளில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி மதுரை, திண்டுக்கல், தேனி, திருநெல்வேலி, நீலகிரி, சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை மற்றும் கன்னியாகுமரி ஆகிய 9 மாவட்டங்களுக்கு இந்த மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மழையின் போது பலத்த காற்று வீசக்கூடும் என்பதாலும், இடி, மின்னல் தாக்கும் அபாயம் இருப்பதாலும் பொதுமக்கள் யாரும் மின் கம்பங்கள் மற்றும் மரங்களின் அடியில் நிற்க வேண்டாம் என்றும், நீர்நிலைப் பகுதிகளுக்குச் செல்வதைத் முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்றும் மாவட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.