21 வயதில் மாவட்ட ஊராட்சி தலைவர்: ராஜஸ்தானில் போட்டியின்றி தேர்வான இளம்பெண்!
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேர் மாவட்டத்தில் 21 வயது இளம்பெண் ஒருவர் மாவட்ட ஊராட்சி தலைவராகப் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அங்கு நடைபெற்ற மாவட்ட ஊராட்சித் தேர்தலில் மொத்தமுள்ள 21 இடங்களில் காங்கிரஸ் கட்சி 20 இடங்களையும், பா.ஜ.க. ஒரு இடத்தையும் கைப்பற்றியுள்ளது.
இந்தத் தேர்தலில் 12-வது வார்டில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட 21 வயது சந்தோஷ் குமாரி, பா.ஜ.க. வேட்பாளர் லட்சுமியை 6,137 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து, காங்கிரஸ் சார்பில் அவர் மாவட்ட ஊராட்சி தலைவராகப் போட்டியின்றித் தேர்வாகியுள்ளார்.
பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த 12-ஆம் வகுப்பு படித்த சந்தோஷ் குமாரியின் இந்த வெற்றியைக் காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர்.மாவட்ட வளர்ச்சிக்காக அனைவருடனும் இணைந்து பணியாற்றுவதே தனது முதல் நோக்கம் என்றும், பெண்களின் கல்வி மற்றும் சுயசார்பு வாழ்விற்குத் தனி கவனம் செலுத்துவேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்