ரயில் தண்டவாளத்தில் குண்டுவெடிப்பு: பாகிஸ்தான் தொடர்புடைய பெண் உட்பட 2 பேர் கைது!
ராஜஸ்தான் மாநிலத்தில் ரெயில் தண்டவாளத்தில் குண்டுவெடிப்பு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் பெண் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்களுக்கு பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யுடன் தொடர்பு இருக்கலாம் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
ராஜஸ்தானின் ஸ்ரீ கங்காநகர் மாவட்டம் ராம்சிங்பூர் பகுதியில் கடந்த நவம்பர் 3-ம் தேதி இரவு 9.45 மணியளவில் ரெயில் தண்டவாளத்தில் குண்டுவெடிப்பு ஏற்பட்டது. இதில் 2 கான்கிரீட் ஸ்லீப்பர்கள் சேதமடைந்ததுடன், தண்டவாள பகுதியில் பள்ளமும் உருவானது. குண்டுவெடிப்புக்கு சுமார் 75 நிமிடங்களுக்கு முன்புதான் அந்த வழியாக பயணிகள் ரெயில் சென்றதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக ராஜஸ்தான் பயங்கரவாத தடுப்புப் படை மற்றும் போலீசார் இணைந்து விசாரணை நடத்தினர். இதில் பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூரைச் சேர்ந்த மகாக்தீப் கவுர் (21), தவிந்தர் சிங் (22) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
பாகிஸ்தானில் உள்ள 'ஷா', 'சாச்சா' என்ற நபர்களுடன் மகாக்தீப் கவுர் தொடர்பில் இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். பணம் கொடுத்து இந்த சதிச்செயலில் ஈடுபடுத்தியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. கைதானவர்களிடம் இருந்து 2 வெளிநாட்டு கைத்துப்பாக்கிகள், 46 தோட்டாக்கள், ரூ.30 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த சதியில் தொடர்புடைய மற்றவர்களை கண்டறிய விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.