“ரஜினிகாந்தின் ஸ்ரீராகவேந்திரா மண்டபம் இடிக்கப்படுகிறது” - ஸ்டார் ஓட்டல் கட்ட திட்டம்... செளந்தர்யா ரஜினிகாந்த் உறுதி!

 

சென்னை கோடம்பாக்கத்தில் கடந்த பல ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்த நடிகர் ரஜினிகாந்தின் புகழ்பெற்ற 'ஸ்ரீராகவேந்திரா திருமண மண்டபம்' அதன் பயணத்தை நிறைவு செய்துள்ளதாகவும், அந்த இடத்தில் நட்சத்திர ஓட்டல் கட்டப்படவுள்ளதாகவும் அவரது இளைய மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார்.

சென்னை கோடம்பாக்கத்தில் கடந்த 1990களில் கட்டப்பட்ட ஸ்ரீராகவேந்திரா திருமண மண்டபம், ரஜினிகாந்த் ரசிகர்களைச் சந்திக்கும் முக்கிய இடமாகவும், அவரது அரசியல் அறிவிப்பு போன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வுகள் நடைபெற்ற இடமாகவும் திகழ்ந்தது.

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ‘#லவ்’ தமிழ் வெப் தொடருக்கான பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்ட சவுந்தர்யா ரஜினிகாந்திடம் இது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், ஸ்ரீராகவேந்திரா மண்டபம் தங்கள் குடும்பத்துடன் 36 ஆண்டுகளாக இணைந்திருப்பதைச் சுட்டிக்காட்டினார்.

எதற்கும் ஒரு காலம் முடியும் போது அது அடுத்த கட்டத்தை நோக்கி நகர வேண்டும் என்று தனது தந்தை ரஜினிகாந்த் விரும்புவார் என்று குறிப்பிட்ட அவர், அந்த மண்டபத்தின் தற்போதைய பயணம் முடிந்துவிட்டதாகவும், அந்த இடத்தில் அடுத்து என்ன செய்வது என்பது குறித்த ஆலோசனைகள் நடந்து வருவதாகவும் தெரிவித்தார். மேலும், அங்கு நட்சத்திர ஓட்டல் கட்டப்பட உள்ளதாக வெளியான தகவல்கள் உண்ர்தான் எனவும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.