முதலமைச்சர் விஜய்க்கு ரஜினிகாந்த் ஆதரவு? ‘தர்மன்’ விழாவில் அப்படியென்ன பேசினார்?

 

கமல்ஹாசன் தயாரிப்பில், அஸ்வந்த் மாரிமுத்து இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் அவரது 173-வது திரைப்படமான 'தர்மன்' படத்தின் பூஜை மற்றும் டைட்டில் வெளியீட்டு விழா சென்னையில் இன்று  நடைபெற்றது. இந்த விழாவில் பொதுமேடைகளில் தான் பேசும்போது எதிர்கொள்ளும் விமர்சனங்கள் குறித்தும், பொதுமக்களின் கருத்துக்கள்  எவ்வாறு செயல்படுகின்றன என்பது குறித்தும் ரஜினிகாந்த் வெளிப்படையாகவும் சற்று காரசாரமாகவும் பேசினார். அவரது இந்த பேச்சு, தற்போதைய அரசியல் சூழலில் முதலமைச்சர் விஜய்க்கு ஆதரவாகவும் ஒரு முதிர்ந்த அறிவுரையாகவும் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் மத்தியில் விவாதிக்கத் தொடங்கியுள்ளனர்.

விழாவில் பேசிய ரஜினிகாந்த், தான் பொது நிகழ்ச்சிகளில் பேசுவதற்கு தயங்குவதாகக் குறிப்பிட்டு,  "இப்பெல்லாம் என்னை மேடையில் பேச அழைத்தாலே எனக்குத் தயக்கமாக இருக்கிறது. ஏனென்றால், நான் பேசினாலும் பிரச்சனை கிளம்புகிறது. சரி, எதற்கு வம்பு என்று நான் அமைதியாக, சும்மா இருந்தால்... 'இவருக்கு என்ன ஆச்சு, ஏன் பேசவே மாட்டேங்குறார்? வாயில் என்ன கொழுக்கட்டையா வைத்திருக்கிறார்?' என்று கிண்டல் செய்து கலாட்டா செய்கிறார்கள். நான் பேசினாலும், 'இப்ப எதுக்கு இவர் இதைப் பேசுறார்' என்கிறார்கள்."

"பல ஆண்டுகள் கழித்துத்தான் பொதுமக்களின் எண்ண ஓட்டத்தைப் பற்றி ஒரு விஷயத்தைப் புரிந்து கொண்டேன். நம்மைப் பிடிக்காதவர்களுக்கு நாம் என்ன செய்தாலும் பிடிக்காது. அதேபோல, நம்மைப் பிடிக்கும் என்பதால் நாம் எது செய்தாலும் பிடிக்கும் என நினைப்பது முட்டாள்தனம்."

தமிழகத்தில் தவெக ஆட்சிப் பொறுப்பேற்றது முதல், எதிர்க்கட்சியான திமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் முதலமைச்சர் விஜய் மீது ஒரு முக்கிய விமர்சனத்தை முன்வைத்து வருகின்றன. 'முதலமைச்சர் விஜய் பல முக்கியப் பிரச்சினைகளில் நேரடியாக வாய் திறந்து ஊடகங்களிடம் பேசுவதில்லை, சமூக வலைத்தள அறிக்கை மற்றும் அதிகாரிகள் மூலமாகவே நிர்வாகம் செய்கிறார்' என்பதே எதிர்க்கட்சிகளின் பிரதான குற்றச்சாட்டாக உள்ளது.

இந்நிலையில், ரஜினிகாந்த் பேசிய "சும்மா இருந்தால் வாயில் கொழுக்கட்டையா என்று கேட்கிறார்கள், பேசினாலும் தப்பாகப் பார்க்கிறார்கள்" என்ற கருத்து தற்போது முதலமைச்சர் விஜய் எதிர்கொள்ளும் அரசியல் நெருக்கடிக்கு மிகச் சரியாகப் பொருந்துவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

விஜய்யைப் பிடிக்காத அரசியல் எதிரிகள் அவர் என்ன செய்தாலும் அல்லது அமைதியாக இருந்தாலும் விமர்சித்துக் கொண்டேதான் இருப்பார்கள் என்பதால், அந்த விமர்சனங்களைப் பற்றிக் கவலைப்படாமல் கடந்து போக வேண்டும் என்ற ஒரு மூத்த எதார்த்தமான ஆலோசனையைத் தனது பேச்சு மூலம் ரஜினி மறைமுகமாக விஜய்க்கு உணர்த்தியுள்ளார் என அரசியல் வட்டாரங்களில் இந்த வீடியோ வைரலாகி விவாதிக்கப்பட்டு வருகிறது.