ராஜீவ் காந்தி நினைவு தினம்: ஸ்ரீபெரும்புதூர் நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர்கள் மலர் தூவி அஞ்சலி!

 

முன்னாள் பிரதமரும், பாரத ரத்னாவுமான ராஜீவ் காந்தியின் 35-வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி, ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அவரது நினைவிடத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை தலைமையில் காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் மலர் தூவி நெஞ்சார்ந்த அஞ்சலி செலுத்தினர்.

சென்னை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்திற்கு இன்று (மே 21, 2026) காலை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வபெருந்தகை நேரில் வருகை தந்தார். அங்குள்ள ராஜீவ் காந்தி சிலைக்கு மலர் வளையம் வைத்தும், மலர்களைத் தூவியும் அவர் மரியாதை செலுத்தினார்.

இதனைத் தொடர்ந்து, அங்கிருந்த தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து 'பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழி' எடுத்துக் கொண்டனர். இந்த அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் அகில இந்திய மற்றும் மாநில காங்கிரஸ் முக்கியத் தலைவர்கள் பலர் திரளாகப் பங்கேற்றனர்.

குறிப்பாக, சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் எஸ்.ராஜேஷ்குமார், அகில இந்திய காங்கிரஸ் தமிழகப் பொறுப்பாளர் கிரீஷ் சோடங்கர், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்கள் நிவேதித் ஆல்வா, சூரஜ் எம்.என்.ஹெக்டே, மிசோரம், மேகாலயா, அருணாச்சலப் பிரதேச மாநிலங்களின் காங்கிரஸ் பொறுப்பாளர் டாக்டர் செல்வகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு, நாடாளுமன்ற உறுப்பினர் (எம்பி) மாணிக்கம் தாகூர், அகில இந்திய காங்கிரஸ் தொழில் வல்லுநர்கள் பிரிவு தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி, சட்டமன்ற உறுப்பினர்கள் விஸ்வநாதன், ஜமால் முகமது யூனூஸ், தமிழ்நாடு காங்கிரஸ் துணைத் தலைவர் டி.என்.முருகானந்தம், காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் எஸ்.ஏ.அருள்ராஜ் மற்றும் பல்வேறு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள், முன்னணி அமைப்புகளின் நிர்வாகிகள் எனப் பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

தமிழக அமைச்சரவை விரிவாக்கம் நடைபெறும் இதே நாளில், ஸ்ரீபெரும்புதூரில் காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் திரண்டு ராஜீவ் காந்திக்கு அஞ்சலி செலுத்தியுள்ளது அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.