அமைச்சர் ராஜ்மோகனுக்கு பாரத சாரண, சாரணியர் இயக்கத்தின்  தமிழ்நாடு மாநிலப் புரவலராக புதிய பதவி! 

 

தமிழகத்தில் தற்பொழுது புதிதாகப் பொறுப்பேற்றுள்ள அமைச்சரவையில் எழும்பூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினரும், பள்ளிக் கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சருமான ராஜ்மோகன் அவர்களுக்குக் கூடுதல் பொறுப்பாக ஒரு புதிய உன்னதப் பதவி வழங்கப்பட்டுள்ளது. கல்வித் துறையில் பல்வேறு புதிய அதிரடி மாற்றங்களை மேற்கொண்டு வரும் அவர், தற்பொழுது பாரத சாரண, சாரணியர் இயக்கத்தின்  தமிழ்நாடு மாநிலப் புரவலராக  அதிகாரப்பூர்வமாகப் பதவிப் பிரமாணம் செய்துகொண்டு பொறுப்பேற்றுள்ளார்.

சென்னையில் நடைபெற்ற இந்த முக்கியப் பதவியேற்பு விழாவில், கல்வித் துறை மற்றும் சாரண, சாரணியர் இயக்கத்தின் உயர்மட்ட முக்கிய நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டு புதிய மாநிலப் புரவலரான அமைச்சர் ராஜ்மோகன் அவர்களுக்குத் தங்களின் நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தனர். இந்தத் தனித்துவமான பொறுப்பை ஏற்றுக்கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், பள்ளி மாணவர்களிடையே ஒழுக்கம், சமூக சேவை மற்றும் தேசப்பற்றை வளர்ப்பதில் இந்த இயக்கத்தின் பங்கு மிகவும் மகத்தானது என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலும் பயிலும் மாணவ, மாணவிகள் அனைவரும் இந்தச் சாரண, சாரணியர் இயக்கத்தில் தங்களை அதிக அளவில் இணைத்துக் கொள்ளத் தேவையான அனைத்து விழிப்புணர்வுகளும் இனி தீவிரமாக ஏற்படுத்தப்படும் என்றும் அமைச்சர் ராஜ்மோகன் உறுதியளித்துள்ளார்