திமுக அனைத்துக்கட்சி எம்.பி.க்கள் கூட்டத்தை புறக்கணிப்பது முறையற்றது... அமைச்சர் ராஜ்மோகன் கடுமையான குற்றச்சாட்டு!
தொகுதி மறுவரையறை தொடர்பான அனைத்துக்கட்சி எம்.பி.க்கள் கூட்டத்தை திமுக புறக்கணிப்பது முற்றிலும் முறையற்றது என்று அமைச்சர் ராஜ்மோகன் குற்றம் சாட்டியுள்ளார். தமிழக முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் தொகுதி மறுவரையறை குறித்த முக்கிய அனைத்துக்கட்சி எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தை திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகள் புறக்கணிப்பதாக அறிவித்த நிலையில் பல்வேறு கருத்துகள் எழுந்துள்ளன.
மாநில நலன் சார்ந்த மிக முக்கியமான இந்தக் கூட்டத்தில் பங்கேற்காமல் திமுகவும் அதிமுகவும் புறக்கணிப்பது அவர்களுக்கு மாநில நலனில் அக்கறை இல்லை என்பதைக் காட்டுகிறது என்றார். காவிரி விவகாரத்தை கையில் எடுத்துத் திசைதிருப்ப முயலும் திமுகவினர் உண்மையான பிரச்சனைகளை விவாதிக்கத் தயங்குவதாகவும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
அரசின் ஆக்கப்பூர்வமான கூட்டத்தைக் கொச்சைப்படுத்தவும் மக்களின் கவனத்தைத் திசைதிருப்பவும் மட்டுமே அவர்கள் முயல்வதாக அவர் மேலும் கூறினார்.தமிழகத்தின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக நடத்தப்படும் இதுபோன்ற கூட்டங்களில் அனைத்துக் கட்சிகளும் பங்கேற்பது அவசியமான ஒன்றாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இந்த விவகாரத்தில் திமுகவின் நிலைப்பாடு இரட்டை வேடத்தையே காட்டுவதாகவும் அவர் தனது பேட்டியில் திட்டவட்டமாகத் தெரிவித்தார். .