ஆபரேஷன் சிந்தூர் ஓராண்டு நிறைவு... ராணுவத்தின் வீரத்திற்கு ராஜ்நாத் சிங் புகழாரம்!

 

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஆண்டு பயங்கரவாதிகள் நடத்திய கோரத் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தியா நடத்திய 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை இன்றுடன் ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நாளில், இந்திய ராணுவத்தின் ஈடு இணையற்ற வீரத்திற்கும் தியாகத்திற்கும் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது மனமார்ந்த மரியாதையைச் செலுத்தியுள்ளார். நமது ராணுவ வீரர்களின் துணிச்சலும் அர்ப்பணிப்புமே இந்திய தேசத்தைப் பகைவர்களிடமிருந்து தொடர்ந்து பாதுகாத்து வருகின்றன என அவர் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு மே 7-ம் தேதி முப்படைகளும் இணைந்து நடத்திய இந்தத் துல்லியத் தாக்குதலில், பாகிஸ்தான் எல்லையில் இருந்த 9 பயங்கரவாத முகாம்கள் முற்றிலுமாக அழித்தொழிக்கப்பட்டன. சுமார் 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்ட இந்த அதிரடி நடவடிக்கை, இந்தியப் படைகளுக்கு இடையேயான ஒருங்கிணைந்த செயல்பாட்டிற்கு ஒரு புதிய அளவுகோலை அமைத்துள்ளதாக ராஜ்நாத் சிங் குறிப்பிட்டுள்ளார். எந்தவொரு இக்கட்டான தருணத்திலும் இந்தியப் பாதுகாப்புப் படைகள் தீர்க்கமாகச் செயல்பட எப்போதும் தயாராகவே உள்ளன என்பதற்கு இந்தத் தாக்குதலே ஒரு சான்று என அவர் கூறியுள்ளார்.

ஆபரேஷன் சிந்தூர் ஓராண்டு நிறைவை முன்னிட்டு பிரதமர் மோடி தனது சமூக வலைதளப் பக்கத்தின் முகப்புப் படத்தை மாற்றி ராணுவத்திற்குத் தனது கௌரவத்தைச் செலுத்தியுள்ளார். "நாங்கள் யாரையும் தேவையில்லாமல் தொந்தரவு செய்ய மாட்டோம்; ஆனால் எங்களைத் தாக்கினால் சும்மா விடமாட்டோம்" என்ற இந்தியாவின் உறுதியான நிலைப்பாட்டை இந்த நடவடிக்கை உலகிற்கு நிரூபித்துக் காட்டியுள்ளது. ராணுவத்தின் இந்தத் துணிச்சலான செயல்பாட்டை நாடு முழுவதும் உள்ள மக்கள் இன்று நன்றியுடன் நினைவு கூர்ந்து சமூக வலைதளங்களில் தங்களது பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.