2.30 மணி நேரம் நீடித்த பாசப் போராட்டம்: அன்புமணியைக் கட்டியணைத்து அழுத ராமதாஸ்!

 

தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ராமதாஸ் இடையே நடைபெற்ற சந்திப்பு வெறும் குடும்ப ஆசி பெறும் நிகழ்வாக மட்டுமில்லாமல், 2.30 மணி நேரம் நீடித்த உணர்ச்சிப்பூர்வமான பாசப் போராட்டமாக அமைந்திருந்தது என்ற நெகிழ்ச்சியான தகவல்கள் தற்பொழுது வெளியாகியுள்ளன.

"இனி எல்லாம் நல்லதே நடக்கும்" என்று சந்திப்பிற்குப் பின் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களிடம் நம்பிக்கையுடன் தெரிவித்ததன் பின்னணியில், தைலாபுரம் இல்லத்திற்குள் நடந்த உருக்கமான சம்பவங்கள் பாமக வட்டாரத்தில் கசிந்துள்ளன.

கடந்த ஓராண்டிற்கும் மேலாகத் தந்தைக்கும் மகனுக்கும் இடையே அரசியல் முடிவுகள் மற்றும் குடும்ப விவகாரங்கள் காரணமாகப் பேச்சவார்த்தை இன்றி மனக்கசப்பு நீடித்து வந்தது. இந்தச் சூழலில், இன்று மதியம் தனது ஒட்டுமொத்தக் குடும்பத்தினருடன் அன்புமணி ராமதாஸ் தைலாபுரம் இல்லத்திற்குச் சென்றார்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு தன் மகனைக் கண்டதும் பாமக நிறுவனர் ராமதாஸ் உணர்ச்சிவசப்பட்டுக் கண் கலங்கியுள்ளார். ஒருகட்டத்தில் கடந்த காலக் கசப்புகளை மறந்து, தன் மகன் அன்புமணியைக் கட்டியணைத்து ராமதாஸ் அழுததாகக் கூறப்படுகிறது. இந்தத் தருணம் அங்கிருந்த ஒட்டுமொத்தக் குடும்ப உறுப்பினர்களையும் நெகிழச் செய்துள்ளது.

இதனைத் தொடர்ந்து மருத்துவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் அவரது மனைவி சௌமியா அன்புமணி ஆகியோர் மருத்துவர் ராமதாஸ் மற்றும் அவரது மனைவியின் காலில் விழுந்து முறைப்படி ஆசி பெற்றுள்ளனர். 
குடும்பத்தினர் அனைவரும் ஒன்று கூடிப் பேசியதைத் தொடர்ந்து, மருத்துவர் ராமதாஸும் அன்புமணி ராமதாஸும் மட்டும் தனியாக அமர்ந்து சுமார் இரண்டரை மணி நேரம் மனம் விட்டுப் பேசியுள்ளனர்.

இந்த நீண்ட ஆலோசனையின் போது, கட்சிக்குள்ளும் குடும்பத்திற்குள்ளும் பிளவை ஏற்படுத்திய கருத்து வேறுபாடுகள் குறித்து இருவரும் வெளிப்படையாகப் பேசி விவாதித்ததாகவும், அதன் முடிவில் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் சுமுகமாக முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாகவும் அறிவாலய மற்றும் தைலாபுர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.