‘மாம்பழம்’ சின்னத்தை முடக்க முடியாது - ராமதாஸ் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு!

 

பாட்டாளி மக்கள் கட்சியின் சின்னமான 'மாம்பழம்' தொடர்பாக ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே நீடித்து வரும் சட்டப் போராட்டத்தில், தற்போது அன்புமணி தரப்பிற்குச் சாதகமான தீர்ப்பு கிடைத்துள்ளது.

பாமகவின் தலைமை மற்றும் சின்னம் தொடர்பாகத் தந்தை ராமதாஸுக்கும், மகன் அன்புமணிக்கும் இடையே மோதல் வெடித்தது. தேர்தல் ஆணையம் ஆவணங்களின் அடிப்படையில் கட்சியும், சின்னமும் அன்புமணி தரப்புக்கே சொந்தம் என்று ஏற்கனவே அறிவித்திருந்தது. இதை எதிர்த்து ராமதாஸ் தரப்பு சிவில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தது.

சின்னத்தை முடக்கக் கோரி ராமதாஸ் தரப்பு உச்ச நீதிமன்றத்தை அணுகியபோது, "அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சி என்ற அந்தஸ்தை பாமக இழந்துவிட்டதால் இதில் நேரடியாகத் தலையிட முடியாது; எனவே சிவில் நீதிமன்றத்தை அணுகி மூன்று நாட்களில் தீர்வு காணுங்கள்" என உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து, சென்னை 12-ஆவது கூடுதல் உரிமையியல் நீதிமன்றத்தில் நீதிபதி தர்ம பிரபு முன்னிலையில் இன்று விசாரணை நடைபெற்றது. தேர்தல் அறிவிக்கப்பட்டு, வேட்புமனுத் தாக்கல் உள்ளிட்ட தேர்தல் நடைமுறைகள் முழுவீச்சில் தொடங்கிவிட்ட நிலையில், சின்னம் தொடர்பான விவகாரத்தில் நீதிமன்றம் தற்போது தலையிட முடியாது. சின்னம் தொடர்பாக ஏதேனும் முறையீடு இருந்தால் தேர்தல் ஆணையத்தைத்தான் அணுக வேண்டும் என்று கூறி, மாம்பழச் சின்னத்தை முடக்கக் கோரிய ராமதாஸின் மனுவைத் தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், மாம்பழச் சின்னம் முடக்கப்படாதது அன்புமணி தலைமையிலான பாமகவினருக்குப் பெரும் உற்சாகத்தை அளித்துள்ளது. அதே சமயம், ராமதாஸ் தரப்பு அடுத்தகட்டமாகத் தேர்தல் ஆணையத்தை அணுகுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.